சென்னை: விடியல் பயணம் திட்டத்தின் கீழ் கூடுதலாக 80 புதிய சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 2022-23 மற்றும் 2023-24ம் வருடத்திற்கான அறிவிப்பின்படி 2,000 புதிய பேருந்துகளில் இதுவரை 1,905 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
அதேபோல் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,500 பேருந்துகளில் கூண்டு முழுவதும் புதுப்பிக்க ஆணை வழங்கப்பட்டு, அதில் 1,262 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும், மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டு வரும் 228 தாழ்தள பேருந்துகளுடன், கூடுதலாக 41 புதிய தாழ்தள பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அதன்படி, 2024-25ம் வருடத்திற்கான அறிவிப்பின்படி, 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே மற்ற போக்குவரத்து கழகங்களில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக மாநகர் போக்குவரத்து கழகத்தில் 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகளையும் சேர்த்து 242 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சாதாரண பேருந்துகள் ‘‘விடியல் பயண திட்டத்தில்’’ இயக்கப்படுவதால் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோர்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 80 புதிய பேருந்துகள் கூடுதலாக இயக்கம் appeared first on Dinakaran.