×
Saravana Stores

கும்பகோணம் சார்ங்கபாணிப் பெருமாள்

திருக்குடந்தை திருத்தலத்தில் வில்லேந்திய கோலத்தில் உற்சவர் பெருமாள் திகழ்கிறார். அதனாலேயே இவர் சார்ங்கபாணி எனப்படுகிறார். சிலர் இவரை வாய்க்கு சுலபமாக ‘சாரங்கபாணி’ என்று அழைக்கிறார்கள். ஆனால் சாரங்கம் என்றால் மான் என்று பொருள். சாரங்கத்தைக் கையிலேந்தியவர் சிவபெருமான். அதனால் அவர்தான் சாரங்கபாணி. வில்லேந்திய பெருமாள் சார்ங்கபாணிதான். கோயில் முகப்பிலேயே ‘சார்ங்கபாணிப் பெருமாள் கோயில்’ என்றே பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள். லட்சுமி நாராயணன், சார்ங்கபாணிப் பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவன். அர்ச்சாவதாரமாக, அழகு மிகுத்து சயனித்திருக்கும் இந்தப் பெருமாளுடைய கோயிலுக்கு ஒரு ராஜகோபுரம் இல்லையே என்ற ஏக்கம் அவனைப் பெரிதும் வாட்டியது. தானே தனியனாக அந்த முயற்சியை மேற்கொண்டான். பிரம்மசாரியான அவன், தன் வாழ்நாள் முழுவதும் இந்தப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டான். குடும்ப வாழ்க்கையைப் பற்றி அவன் சிந்தித்துப் பார்த்ததேயில்லை. அவனுடைய நண்பர்களும், உறவினர்களும், ‘இப்படி கல்யாண சிந்தனையின்றி காலம் பூராவும் இந்த கருட வாகனனுக்காக செலவிட்டாயானால், உன் இறப்புக்குப் பிறகு உனக்கு ஈமக்கடன் செய்ய உனக்கு ஒரு வாரிசு வேண்டாமா? அதற்காகவாவது திருமணம் செய்துக்கொள்,’ என்று அவனை வற்புறுத்தினார்கள்.

அவனோ, ‘‘எல்லாம் பெருமாள் பார்த்துக்கொள்வார், எனக்கென்ன கவலை?’’ என்று அவர்களிடம் அலட்சியமாகவும், ஆழ்மனதில் பெருமாள் பக்தியுடனும் உறுதியாகச் சொன்னான். அதுமட்டுமல்லாமல், தன் காலத்திலேயே மிகுந்த சிரமத்துடன், சிறிது சிறிதாகப் பொருள் ஈட்டி, பலரிடமும் யாசகம் பெற்று அந்த ராஜகோபுரத்தை முழுமையாகக் கட்டி முடித்து அந்த நிறைவிலேயே மோட்சமும் அடைந்தான். இப்போது ஊரார் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். ‘இவனுக்கு இறுதிச் சடங்குகளை யார் செய்வது? ஒரே வீம்பாக திருமணமே செய்துகொள்ளாதிருந்துவிட்டானே! வாரிசு இல்லாதவனாகிவிட்டானே!’ என்றெல்லாம் யோசித்து மறுகினார்கள். அன்றிரவு ஆலய அர்ச்சகரின் கனவில் சார்ங்கபாணிப் பெருமாள் தோன்றினார். ‘’என் கையில் தர்ப்பையை வைத்து, பிறகு அதை எடுத்துச் சென்று என் பக்தனான லட்சுமி நாராயணனுக்கு ஈமக்கடன் செய்யுங்கள்,’’ என்றார்.பெரிதும் அதிசயித்தபடி ஊராரிடம் தன் கனவை சொன்னார் அர்ச்சகர். யாராலும் நம்பவே முடியவில்லை. அதெப்படி பெருமாள் இப்படி ஒரு ‘காரியம்’ செய்வார் என்று அதிசயித்தார்கள். மறுநாள் அர்ச்சகர் தர்ப்பைப் புல்லை எடுத்துக்கொண்டு சந்தேக பக்தர்களுடன் பெருமாளின் கருவறைக்குள் போனபோது, அங்கே பெருமாள் ஈர உடையுடன், பூணூலை இடமாக அணிந்து காட்சி கொடுத்ததைப் பார்த்ததும் அனைவருக்கும் வெலவெலத்துவிட்டது! என்ன அதிசயம் இது! லட்சுமி நாராயணன்தான் எத்தனை கொடுத்து வைத்தவன்! அனைவருக்கும் கண்களில் நீர் வெள்ளமாகப் பெருகியது.

பகவான் சொன்னபடியே அவர் திருக்கரத்தில் தர்ப்பையை வைத்த அர்ச்சகர், பிறகு அதை எடுத்துச் சென்று பெருமாள் சார்பாக லட்சுமி நாராயணனுக்கான இறுதிச் சடங்கை முறைப்படி நிறைவேற்றி வைத்தார். இந்த சம்பவம் நிகழ்ந்தது ஒரு தீபாவளி தினத்தன்று. தீபாவளி, அமாவாசையன்று அனுசரிக்கப்படுவதால், இப்போதும் இந்தத் திருத்தலத்தில் பக்தன் லட்சுமி நாராயணனுக்கு தீபாவளி அமாவாசையன்று சிராத்தத்தை பெருமாள் நடத்தி வைக்கிறார். இதில் நெகிழ்ச்சியான இன்னொரு விஷயம் என்னவென்றால், அன்றைய தினம், பெருமாள் அமுது செய்வது அன்றைய சிராத்ததுக்காகத் தயாரிக்கப்பட்ட உணவுவகைகளைத்தான்; வழக்கமான பிரசாதங்களை அல்ல! தன்மீது பக்தி கொண்ட பரம பக்தன் ஒருவனுக்கு பெருமாள் இவ்வளவு கீழிறங்கி வந்து அவன் நற்கதி அடைய, தர்ப்பைப் புல்லையும் ஏந்துகிறார் என்றால் இந்தக் கருணையை புகழ வார்த்தைகள்தான் ஏது?இத்தனை சிறப்புகளுடன் கூடியதாகத் திகழும் இந்த ராஜகோபுரம், உயரத்தில் மூன்றாவதாகப் போற்றப்படுகிறது. முதலாவது ஸ்ரீரங்ககோபுரம் 236 அடி உயரம்; இரண்டாவது ஸ்ரீவில்லிப்புத்தூர் 165 அடி; மூன்றாவது இந்த ராஜகோபுரம் 150 அடி! வைணவ சம்பிரதாயப்படி ஸ்ரீரங்கத்தை மேல்வீடு என்று சொல்வார்கள். திருக்கண்ணபுரம் திவ்ய தேசத்தைக் கீழ்வீடு என்றும், திருக்குடந்தையை நடுவீடு என்றும் அழைப்பர். பரந்தாமன் தன் அனுகிரங்களை பக்தர்களுக்குத் தண்ணொளி யாக வழங்குகிறான்என்பதால் இந்த மூன்று திருத்தலங் களையும் வாநிலா முற்றம் (ஸ்ரீரங்கம்), நீள்நிலா முற்றம் (திருக்கண்ணபுரம்), தூநிலா முற்றம் (திருக்குடந்தை) என்றும் வழங்குகிறார்கள். தூநிலா முற்றமான திருக்குடந்தை சார்ங்கபாணியை பெரியாழ்வார் தம் பாசுரத்தில் நயம்படக் குறிப்பிடுகிறார்:

‘`தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா அம்புலீ!
சந்திரா! வா என்று
கோநிலாவக் கொட்டாய் சப்பாணி
குடந்தைக் கிடந்தானே சப்பாணி’’

தாம் இயற்றிய மிகப் பெரிய யாகத்தின் பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அளிப்பது என்று முனிவர்களுக்கிடையே யோசனை எழுந்தது. அத்தகைய தகுதியுடையவர் யார் என்பதை அறிந்து வர அவர்கள் தங்கள் பிரதிநிதியாக பிருகு முனிவரை அனுப்பி வைத்தார்கள். அவர் முதலில் சத்தியலோகம் சென்றார், பிரம்மனை சந்திக்க விரும்பிய அவரது விருப்பம் ஈடேறவேயில்லை. காரணம் பிரம்மன் உட்பட யாருமே அவரை மதிக்கவில்லை; வரவேற்கவும் இல்லை. அவரவர் தத்தமது சுகபோகங்களில் திளைத்திருந்தார்கள்; பிருகு என்ற இடையூறை அவர்கள் விரும்பவில்லை. சினம் கொண்ட முனிவர், விருட்டென்று அங்கிருந்து புறப்பட்டார். நேராக கயிலாயம் சென்றார். அங்கும் ஏகாந்த நிலையில் இருந்த ஈசன் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. சினம் கூடியது. மூன்றாவதாக பாற்கடல் சென்றார். அங்கே திருமகள் கால்பிடித்துவிட, சுகமாக சயனித்திருந்த திருமாலும் முனிவரை கவனிக்கவில்லை. ஏற்கெனவே ஏறியிருந்த சினச் சுமை இந்தக் காட்சியைக் கண்டதும் இன்னும் அதிகமாயிற்று. எல்லா கோபத்தையும் சேர்த்து மொத்தமாகத் திருமாலின் மீது பிரயோகித்தார். தன் காலால் திருமாலின்
மார்பில் உதைத்தார்.

திடுக்கிட்ட மஹாவிஷ்ணு, பிருகு முனிவரின் கோபத்தை உணர்ந்து அவர் உதைக்கும் அளவுக்கு அவரை சினம் கொள்ள வைத்துவிட்டோமே என்று வருந்தி, அவரது காலைப் பிடித்து, ‘என்னை உதைத்ததால் தங்கள் பாதம் வலித்திருக்குமே,’ என்று சொன்னபடி வருடிவிட்டார். அவரை கவனிக்காத தன் பிழையைப் பொறுத்தருளும்படி கனிவுடன் கேட்டுக்கொண்டார். அந்தக் கனிவால் முனிவர் கூனிக்குறுகிப் போனார். இந்த கருணை சீலனை எவ்வளவு மோசமாக அவமதித்துவிட்டோம் என்று பெரிதும் வருந்தினார். கூடவே, இப்படி பொறுமை காத்த இந்த மூர்த்தியே யாகப் பயனைப் பெறத் தகுதியானவர் என்று தேர்வும் செய்தார். அதன்படி வேள்விப் பலன்கள் எல்லாம் திருமாலையே சேர்ந்தன. ஆனால், திருமகளுக்கு, தன் நாயகன் பிருகு முனிவரை மன்னித்ததோடு, அவர் கால்களையும் இதமாக வருடிவிட்ட செயலும் பெரிய மனத்தாங்கலைக் கொடுத்துவிட்டது. அவர் உதைத்த இடம், தான் நிரந்தரமாக உறைவதற்கான திருமார்பு அல்லவா? உடனே முனிவரை சினந்து தண்டிக்காமல், அவரை மன்னித்து, தான் பிழை செய்த தாகவும் ஒப்புக்கொள்கிறாரே, இது மஹாலட்சுமியாகிய தன்னைப் பெரிதும் அவமானப்படுத் துவதாக அல்லவா உள்ளது! இப்படி பிறருக்காகத் தன்னை விட்டுக் கொடுக்கும் இவருடன் எப்படி தொடர்ந்து வாழ்வது என்று சலித்துக் கொண்ட திருமகள் அவரைப் பிரிந்து பூலோகத்தில் கோல்ஹாப்பூர் என்ற தலத்துக்கு வந்தாள்.

தன் அகங்காரத்தால், நாராயணனையே அவமதித்துவிட்ட தன் இழிசெயலால் பெரிதும் வெட்கமுற்ற பிருகு முனிவர், அதனால், திருமகள், திருமாலைவிட்டுப் பிரிந்தது கண்டு வருத்தமுற்றார். இதற்குப் பிராயசித்தமாக, இனி வரும் பிறவியில் தன் மகளாக மஹாலட்சுமி பிறக்க வேண்டும் என்றும், அவளை திருமால் மணந்து தன்னுடன் மருமகனாக உறவு கொள்ள வேண்டும் என்றும் வரம் பெற கடுந்தவத்தை மேற்கொண்டார். தன்னை விட்டு திருமகள் பிரிந்ததால் பெரிதும் வாட்டமுற்ற திருமால் பூலோகத்துக்கு அவளைத் தேடுவதற்காக இறங்கி வந்தார். திருவேங்கட மலையில் ஒரு வேடுவனாக ஸ்ரீநிவாசன் என்ற பெயர் கொண்டு தன் மனதுக்கினியாளை அவர் தேடி வந்தபோது பத்மாவதியை சந்தித்தார். இந்த பத்மாவதியும், மஹாலட்சுமியின் ஓர் அம்சமே. அவளுடைய முந்தைய பிறவியில், அதாவது தன் ராமாவதார காலத்தில் அவள் வேதவதியாகத் திகழ்ந்தவள். தன்னை மணக்க விரும்பிய அவளிடம், ‘இப்பிறவியில் இரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என்று ராமன் கூறிவிட்டதால், அடுத்த பிறவியிலாவது தன் எண்ணம் ஈடேறுமா என்று ஏக்கம் கொண்டிருந்தாள் வேதவதி. அதனால் அவளே பத்மாவதியாகப் பிறந்து திருமாலுக்காகக் காத்திருக்க, ஸ்ரீநிவாசனாக வந்த அவர், அவள் விருப்பத்தை நிறைவேற்றினார்.

இதற்கிடையில் நாரதர் மூலமாக மஹாவிஷ்ணு பூமிக்கு வந்ததையும், ஸ்ரீநிவாசராக பத்மாவதியை மணந்து கொண்டதையும் அறிந்த திருமகளின் சினம் இன்னும் அதிகமாயிற்று. உடனே கோல்ஹாப்பூரிலிருந்து புறப்பட்டு சீற்றத்துடன் திருமலைக்கு வந்தாள். மீண்டும் அவளை கோபத்துக் குள்ளாக்கி விட்டோமே என்று வருந்திய பெருமாள், அவள் சினத்துக்கு அஞ்சி அங்கிருந்து கும்பகோணத்துக்கு ஓடோடி வந்தார். அங்கே ஒரு பாதாளக் குகையில் ஒளிந்துகொண்டார்.
(இப்போதும் குடந்தை சார்ங்கபாணி கோயிலில் பாதாள ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் பூமிக்கு அடியில் ஒரு சந்நதியில் சேவை சாதிக்கிறார் பெருமாள். சில படிகள் இறங்கிச் சென்றுதான் இவரை தரிசிக்க முடியும். பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களில்தான் அந்த சந்நதியை தரிசனத்துக்காகத் திறந்து வைப்பார்கள் என்று கோயிலில் குறிப்பிட்டார்கள்.)

தேடி வந்த நாயகன் காணாமல் ஒளியவே, துயரம் கொண்டாள் தேவி. இனி அவனைக் காண வேண்டுமானால் அது கடுந் தவத்தால் மட்டுமே இயலும் என்பதை உணர்ந்து அவ்வாறே தவம் மேற்கொண்டாள். அதுவும் எப்படி? ஒரு தடாகத்தில், ஒரு தாமரை மலரில் சிறு குழந்தையாக உருமாறி! அப்போது அங்கே குடிலமைத்து இறைப்பணி ஆற்றிய பிருகு முனிவர் அந்தக் குழந்தையைப் பார்த்து, பெருமகிழ்வு கொண்டு தன் மகளாக எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். தாமரையில் தோன்றியவள் என்பதால் கோமளவல்லி என்று பெயருடன் அவள் பொலிவுடன் திகழ்ந்தாள். இந்த சம்பவங்களை இப்படியே விட்டுவிட்டு, மீண்டும் ராமாவதார காலத்துக்குச் செல்வோம். பட்டாபிராமனாக அயோத்தியே அகமகிழ முடிசூட்டிக்கொண்ட ராமன், தன்னுடைய இந்த சந்தோஷத்துக்குக் காரணமான அனைவருக்கும் அன்பளிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். அந்த வகையில் விபீஷணனுக்கு தன் இக்ஷ்வாகு வம்சத்தவரால் வழிவழியாக வழிபடப்பட்டுவந்த ஆராதன விக்ரகத்தை அளித்தார்.

ப்ரணவாக்ருதி மற்றும் வைதிக விமானங்களைக் கொண்ட அந்த அர்ச்சா மூர்த்தியை விபீஷணன் இலங்கைக்குப் பேருவகையுடன் கொண்டு சென்றான். ஆனால் வழியில் ஸ்ரீரங்கத்தில் ப்ரணவாக்ருதி விமானத்துடன் அரங்கன் அங்கேயே தான் தங்கிவிடும் விருப்பத்தை விபீஷணனுக்குச் தெரிவித்து, தன்னை அவன் ஆண்டுக்கு ஒருமுறை வந்து வழிபட்டுச் செல்லலாம் என்று தெரிவித்துவிட்டார். விபீஷணன் திகைத்து நிற்க, வைதிக விமானத்துடன் தான் குடந்தையில் அர்ச்சாவதார ரூபியாக சேவை சாதிக்கப் போவதாகவும், தன் திருமகளை அங்கே மணம் புரியவிருப் பதாகவும் தெரிவித்தார். அதேபோல குடந்தையில், வில்லெந்திய கோலத்தில் கோயில் கொண்ட அவர், கோமளவல்லியாக அவதரித்திருந்த மஹாலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டு அனைவரது விருப்பங்களையும் பூர்த்தி செய்தார். அப்படி மகிழ்ந்தவர்களில் பிருகு முனிவர் முக்கியமானவர். தான் அவமதித்ததையும் பொருட்படுத்தாமல் தன் பாதங்களைத் தன் திருக்கரங்களால் வருடி ‘தான் நாண நன்னயம் செய்த’ பெருமாளே தனக்கு மருமகனாகவும் மாறிய தெய்வானுக்ரகத்துக்கு உள்ளம் நெகிழ நன்றி சொன்னார் அவர். தன்மீது கோபமுற்ற திருமகளே தனக்கு மகளாக அமைந்ததும் அவர் மனதை நிறைவித்தது.

கோமளவல்லியை மணம் புரிந்துகொண்ட தாலேயே இத்தலம் கல்யாணபுரி என்றும் வழங்கப்பட்டது. கோமளவல்லி அவதரித்த ஹேமபுஷ்கரிணியில் இன்றளவும் நடத்தப்படும் மாசி மாத தெப்போற்சவம் மிகவும் பிரபலமானது. ஸ்ரீரங்கம், பெருமாளின் பெருமைக்குரிய க்ஷேத்திரம் என்றால், திருக்குடந்தை அவரது பேரழகைப் போற்றும் திருத்தலம் என்பார்கள். காவிரியும் கொள்ளிடமும், ஸ்ரீரங்கனை அரவணைத்துச் செல்வதுபோல, குடந்தை சார்ங்கராஜாவையும் காவிரியும், அரசலாறும் தழுவிச் செல்கின்றன.ஸ்ரீரங்கம் துவங்கி அனைத்து திவ்ய தேசங்களையும் மங்களாசாசனம் செய்த நாலாயிரம் பிரபந்தங்களையும் ஒருங்கே தொகுக்க குடந்தை ஆராவமுதனாகிய மூலவர் உதவியிருக்கிறார். அது எப்படி?ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில், காட்டுமன்னார் கோயில் என்ற தலத்தில் அவதரித்த நாதமுனிகள் ஒருமுறை திருக்குடந்தை வந்து பெருமாளை தரிசனம் செய்தார். அப்போது சில பக்தர்கள், ‘குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே,’ என்று பெருமாள் புகழ் பாடிச் செல்வதைக் கேட்டார். ஆயிரம் பாடல்கள் இருக்க அவற்றில் தாம் பாடுவது இந்தப் பத்துப் பாடல்களே’ என்று அவர்கள் சொல்லக் கேட்டு வியந்தார். பெருமாள் புகழை ஆயிரம் பாடல்கள் வர்ணிக்கின்றனவா என்று ஆனந்தமாகத் திகைத்தார். ஆனால் அவர்களோ, ‘ஓராயிரம் அல்ல; நான்காயிரம் பாசுரங்கள் உள்ளன’ என்று குறிப்பிட்டுச் சொன்னபோது அவர் அப்படியே மயங்காத குறைதான். ‘அடடா, அந்த நாலாயிரத்தையும் தொகுக்க வேண்டுமே!’ என்று பரிதவித்தார். அந்தப் பெரும்
பணியை எப்படி நிறைவேற்றுவது என்றும் புரியாமல் திகைத்தார்.

அன்றிரவு அவர் சற்றே குழப்பத்துடன் கண்ணயர்ந்தபோது, அவர் கனவில் பெருமாள் தோன்றினார். ஆழ்வார் திருநகரி திருத்தலத்துக்குச் செல்லுமாறும், அங்கே அந்தப் பிரபந்தங்களைத் தொகுக்கும் வழிமுறை கிடைக்குமென்றும் அறிவுறுத்தினார். அதன்படியே நாதமுனிகள் ஆழ்வார் திருநகரி சென்றார். அங்கே நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வாரின் அறிவுரைப்படி ‘`கண்ணிநுண் சிறுத்தாம்பினால்’’ என்று தொடங்கும் பாடல்களை 12000 தடவை பாடி நம்மாழ்வாரின் திவ்ய தரிசனம் கிடைக்கப் பெற்றார். அதோடு அங்கே மறைந்திருந்த நாலாயிரம் பாசுரங்களையும் நம்மாழ்வாரின் ஆசியோடு எடுத்து, தொகுத்துக் கொடுக்கும் பேறும் பெற்றார். இதைக் குறிக்கும் வகையில், ‘தாளம் வழங்கி தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்’ என்று ஸ்ரீவேதாந்த தேசிகன் நாதமுனிகளைக் கொண்டாடுகிறார். இந்த காலகட்டத்திற்குப் பிறகுதான், அபிநயித்தபடி பாசுரங்களைப் பாடும் ‘அரையர்சேவை’ என்ற வழிபாடு தோன்றியது. இதனாலேயே இந்த சார்ங்கபாணி பெருமாள் ஆராவமுதாழ்வான் என்று போற்றப்படலானார். இங்கு மூலவரான ஆராவமுதனை, மேலோட்டமாகப் பார்த்தால் சயன கோலத்தில் இருப்பது போலத் தெரியும். ஆனால் சற்று உற்றுப் பார்க்கும்போது, எதற்காகவோ எழுந்திருக்க முயற்சிக்கும் தோரணையில் அவர் திகழ்வதைக் காணமுடியும். இந்தவகை சயனத்தால் இவர் ‘உத்தான சாயீ’ என்றும் அழைக்கப்படுகிறார். சுவாமி எழுந்திருக்க முயற்சிப்பானேன்? இதற்கு ஒரு சுவையான பின்னணி உள்ளது: இந்தத் தலத்துக்குப் பெருமாளை தரிசிக்க வந்தார் திருமழிசையாழ்வார். பெருமாள் பள்ளிகொண்டிருப்பதைப் பார்த்த அவருக்கு, அவர் ஓய்வெடுப்பதுபோலவே தோன்றியிருக்கிறது. உடனே,
‘`நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்கு ஞாலமேனமாய்
இடந்த மெய்க்குலுங்கவோ? இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்த காவிரிக்கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே!’’
– என்று அக்கறையுடன் கேட்கிறார்.

‘`பெருமாளே, ஏன் படுத்திருக்கிறீர்கள்? வராஹ அவதாரம் மேற்கொண்டு, பாதாள லோகம் சென்று பூமித் தாயை மீட்டுத் தாங்கி வந்தீர்களே, அந்தக் களைப்பா? ராமாவதாரம் எடுத்து, காடு, மலை, மேடுகளிலெல்லாம் நடந்து, நடந்து கால்கள் நோவுற்றனவோ என் ஐயனே, அதனால்தான் சயனித்திருக்கிறீர்களா? எழுந்திருங்கள் சுவாமி, பதில் கூறுங்கள்,’’ என்று மிகுந்த பரிவுடன் கேட்கிறார். ஆனால் அவருக்கு பதிலளிக்க பெருமாள் எழுந்திருக்க யத்தனித்தபோது, ஆழ்வாருக்கு மனசு பதறிப் போகிறது. ‘அடடா, ஓய்வாக சயனித்திருக்கும் என் தலைவனை எழுப்பிவிட்டேனே,’ என்று தன்னையே கடிந்து கொள்கிறார். உடனே, ‘வாழி கேசனே, அப்படியே படுத்திரும்’ என்று சொல்லி, அவரை மீண்டும் ஓய்வு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். இப்படி ஆழ்வாருக்கு பதில் சொல்ல எழ முனைந்த திருக்கோலம்தான் இப்போது நாம் தரிசிப்பது. இதனாலேயே ஆழ்வார் அனுமதித்திட, பெருமானும் சிறிது எழுந்த நிலையில் சயனத் திருக்கோலத்தில் காணப்படுகிறார். இப்படி இவரை எழச்சொன்ன ஆழ்வாருக்கு ‘திருமழிசைப்பிரான்’ எனத் திருநாமம் ஏற்பட்டது.

இந்தக் கோயிலில் கர்ப்பக் கிரகம் வித்தியாசமானது. ஒரே கல்லால் ஆனது. அதுவும் ஒரு தேர் வடிவத்தில், யானையும், குதிரையும் இழுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குள் பெருமாளை தரிசிக்க, ஆடி மாதம் முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும். இது தட்சிணாயன தேவதையின் வேண்டுகோள் என்றும் அதனை மதிக்கும் வகையில் ஆராவமுதன் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்தான் என்றும் சொல்கிறார்கள். அதேபோல தை முதல் ஆனி முடிய தட்சிணாயன வாசல் வழியாகச் சென்றுதான் மூலவரை தரிசிக்க முடியும். அதனால், கர்ப்பக் கிரகத்துக்கு இருபுறங்களிலும் இவ்விரு வாசல்கள் உள்ளன. பெருமாள் எழுந்தருள்வதும், அந்தந்த மாதங்களில் அந்தந்த வாசல் வழியாகத்தான்.இந்தக் கருவறை அமைப்புக்கு ஏற்றாற்போல திருமங்கையாழ்வார் ஒரு சிறப்பு செய்திருக்கிறார். இது வேறு எந்த திவ்ய தேசத்துக்கும் இல்லாத பெருமை என்றே சொல்லலாம். அதாவது தேர் வடிவில் அமைத்த திருவெழுக்கூற்றிருக்கை என்ற பிரபந்தத்தால் அவர் பெருமாளை மங்களாசாசனம் செய்திருக்கிறார்.

இந்தக் கோயிலில் சித்திரைத் தேர் பெரும் புகழ் பெற்றது. 1936ம் ஆண்டுக்குப் பிறகு ஓடாதிருந்த இந்தத் தேரை, அதற்குப் பிறகு ஐம்பது வருடங்கள் கழித்து, ஓடச் செய்த பெருமை அப்போதைய ஸ்ரீமத் திருக்குடந்தை ஆண்டவன் ஸ்ரீவேதாந்த ராமானுஜ மஹா தேசிகனையே சேரும் என்று ஒரு தகவல் கிடைத்தது. கோயிலில் தனி சந்நதியில் கொலுவிருக்கிறாள் கோமளவல்லித் தாயார். இவர் படிதாண்டா பத்தினி. பிருகு முனிவரால் அவமானப்படுத்தப்பட்ட மஹாவிஷ்ணு மீது கோபம் கொண்டு அவரைப் பிரிந்து வர, அவரும் பூமிக்கு வந்து பத்மாவதி தாயாரை ஸ்ரீநிவாசனாக மணம் புரிந்து, தன் பார்வைக்குப் படாமல் ஒளிந்து கொண்டு, பிறகு தான் கோமளவல்லியாகி அவர் கைத்தலம் பற்றிய அனுபவங்களால், பெருமாளுடன் இணைந்து எங்கும் உலா வர பிரியப்படவில்லை போலிருக்கிறது! அதனாலேயே சந்நதிக்குள்ளேயே தங்கியிருக்கிறாரோ!கோயில் திருப்பணிக்கு கிருஷ்ண தேவராயர் பெரிதும் உதவியிருக்கிறார். ஒரு மன்னவன் இப்படி திருப்பணி செய்தது ஒரு பக்கமிருக்க, ஒரு பக்தன், முகலாயர்களிடமிருந்து இப்பெருமானின் இருப்பிடத்தையே காத்திருக்கிறார். அவர்கள் இந்தக் கோயிலைக் கொள்ளையிட்டு அழிக்க வருகிறார்கள் என்று தெரிந்தது. உடனே, பெரிய வைக்கோல் போரால் அப்போது சிறு அளவாக இருந்த கோயிலை மூடி வைத்தார் அவர். அவர்கள் வந்தபோது அது மாடு கட்டும் இடம் என்று சொல்லி, நம்பவைத்துத் திருப்பி அனுப்பினார். அவர் பெயர் நெய்வாசல் உடையார். இன்றும் நெய்வாசல் உடையார் வம்சத்தினருக்கு, கோயில் உரிய மரியாதையை அளித்து வருகிறது.

இந்த ஆராவமுதனை நம்மாழ்வார் நெக்குருகிப் பாடுவது நம்மையும் நெகிழச் செய்யும்:
“ஆரா அமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன்
எம்மானே’’
திகட்டாத அமுதம் போன்றவனே, நாளெல்லாம் உன்னை வணங்கினாலும், மனசுக்கு நிறைவு ஏற்படாது. உன் மீது நான் கொண்ட பக்திக்கு நீ காட்டும் அருள், என்னை நீர்போலக் கரையச் செய்கிறது. நெடுமாலே, நீர்வளம் மிக்க இந்தக் குடந்தையில் செந்நெல் கதிர்கள் உனக்கு சாமரம் வீசுகின்றனவோ! பள்ளிகொண்ட எம்பெருமானே உன் பேரழகால் மயங்கி மகிழ்ந்து நிற்கிறேன்.

தியான ஸ்லோகம்
சார்ங்கீ கோமள வல்லிகா ஸஹசர: ஸ்ரீகும்பகோணேத்புதே
திவ்யம் வேத விமாந மத்ர விமலம் தீர்த்தம் ஸஹேமாப்ஜி நீ
தத்தாம் நோப் யய நத்வயேச நியதம் த்வாரத்வயம் ப்ராங்முக:
ப்ரத்ய க்ஷோப வதத்ர ஹேம முநயே சேஷாங்க சாயி ஸ்ரீய:
எப்படிப் போவது: கும்பகோணம் நகரின் மையப் பகுதியிலேயே அமைந்திருக்கிறது சார்ங்கபாணி திருக்கோயில். கும்பகோணத்துக்குள் வந்துவிட்டால், நடந்தேகூட கோயிலுக்குப் போகலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.00 முதல் 12 மணிவரையிலும், மாலை 4.30 முதல் 9 மணிவரையிலும்.

முகவரி: அருள்மிகு சார்ங்கபாணி சுவாமி திருக்கோயில், கும்பகோணம் நகர் மற்றும் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612001.

 

The post கும்பகோணம் சார்ங்கபாணிப் பெருமாள் appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Sarnagastani ,Villendiya Kolal ,Charnakapani ,Shivaberuman ,
× RELATED கும்பகோணம் சார்ங்கபாணிப் பெருமாள்