- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா
- திருவண்ணாமலை
- உதயநிதி ஸ்டாலின்
- திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா
திருவண்ணாமலை, அக்.19: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் பங்கேற்கும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து துறைவாரியாக விரிவான ஆய்வு மேற்கொண்டார். மேலும், தீபத்திருவிழாவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி போன்றவற்றை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: திருவண்ணாமலை மாநகரில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை தொடர்ந்து 17 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. மேலும், டிசம்பர் 10ஆம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் சுமார் 6 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்திருவிழா வரும் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றை தினம் மட்டும் சுமார் 40 லட்சத்தில் இருந்து 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதையொட்டி, தீபத்திருவிழாவின்போது பக்தர்கள் கூடுகிற இடங்களில், முதல்வரின் உத்தரவின்பேரில் இன்று கள ஆய்வு செய்தோம். அதைத்தொடர்ந்து, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை கலெக்டர் அலுவலகத்தில் நடத்தினோம். கழக அரசு அமைந்தது முதல் திருவண்ணாமலை மாநகரில் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ₹30 கோடிக்கும் மேல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பக்தர்கள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகமல் இருக்க, குடிநீர் வசதி, நடைபாதை வசதி, வடிகால் வசதி, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மேலும், மக்களின் பாதுகாப்புக்காக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அதிகமாக பொருத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பதற்காக, முதலுதவி மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நடமாடும் கழிப்பறை வசதிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அதேபோல், கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு பலர் அன்னதானம் வழங்குவார்கள். எனவே, உணவு பாதுகாப்புத்துறை மூலம் உணவின் தரத்தை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மின் விளக்கு வசதிகள், தற்காலிக பஸ் நிலையங்கள், போக்குவரத்துத்துறையின் சார்பில் சிறப்பு பஸ் சேவை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு முதல்வர், ₹37 கோடி மதிப்பில், திருவண்ணாமலை திருக்கோயிலுக்கான மாஸ்டர் பிளானை அறிவித்துள்ளார். நிறைய திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள்.
கோயிலுக்குள் காத்திருப்பு மண்டபங்கள், வளைவுகள், அன்னதானக் கூடங்கள் சமூக நலக்கூடங்கள், கோயில் குளத்தை தூர்வாரும் பணிகள் என ஏராளமான பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதில், சில பணிகள் தொடங்கிவிட்டன. வரும் 6 மாதங்களுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். கூடுதலாக ₹5 கோடி மதிப்பில் கோபுரங்கள் மற்றும் கோயில் விமானங்களில் நிரந்தர மின்னொளி வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. கார்த்திகை தீபத்திருநாளில் பக்தர்கள் பாதுகாப்போடும், மகிழ்ச்சியோடும் திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்துள்ளது. குடிநீருக்காக ஏற்கனவே 8 ஆர்.ஓ பிளாண்ட்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது புதிதாக 6 ஆர்ஓ பிளாண்டுகள் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. விரைவில் அவை செயல்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பிக்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், ஓ.ஜோதி, பெ.சு.தி.சரவணன், மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது, அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளர் எம்.பிரதாப், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், டிஆர்ஓ ராமபிரதீபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post 50 லட்சம் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா முன்னிட்டு appeared first on Dinakaran.