சென்னை: மனைவி இறந்ததால் கணவனும், தாய் பிரிவால் மகன், மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவொற்றியூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர், ஜானகி அம்மாள் எஸ்டேட் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அருள் (44), பீஸ் ரேட் முறையில் டெய்லராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அம்சா. இவர்களது மகள் ரம்யா (19), ராயபுரத்தில் உள்ள பாரதி அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மகன் ராஜேஷ் (14), திருவொற்றியூர் பெரியார் நகர் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், அம்சாவிற்கு கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அம்சா சிகிச்சை பலனின்றி கடந்த 3ம் தேதி உயிரிழந்தார். இது கணவர் அருள், மகள் மற்றும் மகன் ஆகியோருக்கு பெரும் மனவேதனை அளித்துள்ளது. மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அருளும், தாயின் பிரிவை தாங்க முடியாமல் மகள் ரம்யா, மகன் ராஜேஷ் ஆகியோரும் உணவு சாப்பிடாமல், தூக்கமின்றி மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர். தினமும் அம்சாவின் பிரிவை நினைத்து வீட்டில் அழுது கொண்டே மூன்று பேரும் இறந்து விடலாம் என புலம்பி உள்ளனர். இவர்களது நிலையைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்கள், பக்கத்து வீட்டார் அவர்களுக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்பு அம்சாவின் 11ம் நாள் சடங்கை குடும்பத்தினர் செய்துள்ளனர். நேற்று 16ம் நாள். காலையில் அம்சாவின் படத்திற்கு விளக்கு ஏற்றி 3 பேரும் வணங்கி உள்ளனர். பின்னர் அருள் வேலைக்கு போகவில்லை. ரம்யா கல்லூரிக்கும், ராஜேஷ் பள்ளிக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர். நேற்று மதியம் இவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் அருளின் தாய் துளசி வந்துள்ளார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை தட்டி மகனையும் பேத்தி, பேரனையும் கூப்பிட்டுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் கதவு திறக்கப்பட வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த துளசி அக்கம்பக்கத்தினரிடம் கூறவே, கதவின் மேல் உள்ள கண்ணாடியை உடைத்து உள்பக்கமாக போடப்பட்ட தாழ்ப்பாளை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது அருள் மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்தார். கட்டில் மெத்தையில் ரம்யாவும், ராஜேஷும் அசைவு இல்லாமல் கிடந்துள்ளனர். இதை பார்த்தவர்கள் உடனடியாக ரம்யாவையும், ராஜேஷையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோத்த டாக்டர் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பிறகு இருவரின் உடலையும் மீட்டு, மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மூன்று பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அருள் மற்றும் ரம்யா, ராஜேஷ் ஆகியோர் இறந்துபோன அம்சாவின் மீது பாசமாக இருந்துள்ளனர். வருவாய் குறைவாக இருந்தாலும் இருக்கிற பணத்தை வைத்து மகிழ்ச்சியாகவும் ஒருவருக்கொருவர் அன்பாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். அம்சா உடல்நிலை குறைவால் உயிரிழந்ததை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. மனவேதனைக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். ரம்யா மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரின் கழுத்தில் கயிறால் இறுக்கிய தழும்பு இருப்பதால், தான் தற்கொலை செய்வதற்கு முன் மகள், மகன் இருவரது கழுத்தையும் நெரித்து விட்டு அருள் தானும் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது மூன்று பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து ரம்யா, ராஜேஷ் இருவரும் தூக்கிட்டு இறந்த பிறகு உடலை இறக்கி வைத்து விட்டு அருள் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். இவர்கள் மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்ட போது, எந்த ஒரு சத்தமும், அலறலும் பக்கத்து வீட்டில் உள்ள சக வாடகைதாரர்களுக்கு கேட்கவில்லை என்பதால், மூன்று பேரும் ஒன்றாக முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிகிறது என போலீசார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தில் தந்தை, மகள், மகன் ஆகிய மூவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post திருவொற்றியூரில் சோகம் தந்தை, மகன், மகள் தற்கொலை: மனைவி இறந்ததால் கணவனும், தாய் பிரிவால் மகன், மகளும் விபரீத முடிவு appeared first on Dinakaran.