- புதுச்சேரி
- பாஜக
- ஜனாதிபதி
- செல்வாகானபதி
- தாம்பரம்
- CBCID
- சென்னை
- ராஜ்ய சபா
- தாம்பரம் ரயில் நிலையம்
- ரயில்வே
- நிலையம்
- தின மலர்
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி உள்பட 3 பேர் நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை அடுத்தடுத்த நகர்வால் பாஜ பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர். கடந்த மக்களவை தேர்தலின் போது மார்ச் 26ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு சென்ற ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் உள்பட 3 பேர், பிடிபட்ட ரூ.4 கோடி நெல்லை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர்.
இதை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் மற்றும் பாஜ தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜ மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்பட 15 பேரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெற்றனர். இந்த வழக்கில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரோடு பகுதியை சேர்ந்த ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபா என்பவர் ரூ.4 கோடி தன்னுடையது என்று உரிமை கோரினார்.
தொடர்ந்து, கடந்த ஜூலை 30ம் தேதி ரயில்வே முஸ்தபாவிடம் சிபிசிஐடி போலீசார் 10 மணிநேரம் விசாரித்தனர். பிறகு முஸ்தபாவின் வங்கி கணக்குகள், ரயில்வே கேன்டீன் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை பெற்று சிபிசிஐடி ஆய்வு செய்த போது, ரூ.4 கோடி தொடர்பாக எந்த பரிமாற்றமும் நடைபெற வில்லை என்பது உறுதியானது. முக்கிய அரசியல் பிரமுகரின் அழுத்தம் காரணமாக முஸ்தபா தனது பணம் என்று உரிமை கோரியதும், தனக்கு அழுத்தம் கொடுத்த நபர்கள் குறித்து சிபிசிஐடி போலீசாரிடம் முஸ்தபா தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் இரண்டாவது முறையாக பாஜ மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் கடந்த 7ம் தேதி 6 மணி நேரம் விசாரித்தனர். அதில் கேசவ விநாயகம் அளித்த தகவலின்படி, ரூ.4 கோடி தொடர்பாக விசாரணை நடத்தும் வகையில் சிபிசிஐடி போலீசார், புதுச்சேரி மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி வரும் 25ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். அதேபோல் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் லால்வானி மற்றும் என்எஸ்சி போஸ் சாலையை சேர்ந்த சூரஜ் ஆகியோருக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி மாநில பாஜ தலைவர் செல்வகணபதி ஆஜராக சம்மன்: சிபிசிஐடி நடவடிக்கை appeared first on Dinakaran.