சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற வார்த்தை விடுபட்டு போனதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தியில், ‘‘டிடி தமிழ் நிகழ்ச்சியில் நடந்த தவறு குறித்து ஆளுநர் மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டது. தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என டிடி தமிழ் குழுவுக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது’’ என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தவறுக்கு சென்னை தொலைக்காட்சி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இதுதொடர்பாக டிடி சென்னை நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி மாத நிறைவு விழா மற்றும் தூர்தர்ஷன் பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது கவனச்சிதறல் காரணமாக ஒரு வரி தவறவிடப்பட்டது. கவனக்குறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ, தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடகர்களிடம் இல்லை. இந்த விஷயத்தில், தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் சர்ச்சை மன்னிப்பு கேட்டது சென்னை தொலைக்காட்சி appeared first on Dinakaran.