×
Saravana Stores

அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்

சென்னை: குடிநீர், கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறி பணம் பறிப்பதாக புகார்கள் வருவதால், நுகர்வோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பைப்லைன் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, மேற்பரப்பு நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் ஆகியவை மூலம் குடிநீர் பெறப்படுகிறது. குறிப்பாக புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றிலும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு குடிநீர் பெறப்படுகிறது. இத்துடன், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் பெறுவதற்கான ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளது. இவற்றை தவிர வடசென்னைக்கு வடக்கில் மீஞ்சூரிலும், தென்சென்னைக்கு தெற்கில் நெம்மேலியிலும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலமும் குடிநீர் பெறப்படுகிறது.

மேலும், கூடுதலாக நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்டதும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்டதுமாக 2 புதிய கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், குடிநீர் வாரியத்திற்கு கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக குடிநீர், கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறி பணம் பறிப்பதாக புகார்கள் வருவதாகவும், எனவே நுகர்வோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை குடிநீர் வாரியத்தால் அங்கீகரிக்கப்படாத சில நபர்கள், தொலைபேசி வாயிலாக நுகர்வோர்களை தொடர்புகொண்டு குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டண நிலுவைத் தொகையை அவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஜி-பே, போன்-பே போன்ற யூபிஐ செயலிகள் மூலம் செலுத்துமாறு கேட்பதாகவும், தவறும்பட்சத்தில் குடிநீர், கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறி பணம் பறிப்பதாக புகார்கள் வாரியத்திற்கு வருகின்றன. எனவே, நுகர்வோர்கள் நிலுவைத் தொகையை செலுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு நிலுவைத் தொகை செலுத்தக் கூறி, அங்கீகரிக்கப்படாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை நிராகரிக்குமாறும் சென்னை குடிநீர் வாரியம் கேட்டுக் கொள்கிறது.

மேலும், கீழே குறிப்பிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகள் வாயிலாக மட்டுமே வாரியத்திற்கு நிலுவைத் தொகையை செலுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சென்னை குடிநீர் வாரிய இணையதளமான www.cmwssb.tn.gov.in அல்லது நேரடி நிலுவைத் தொகை செலுத்தும் இணைப்பான https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login < https://bnc.chennaimetrowater.in/ஆகிய இணைப்புகளின் வாயிலாக செலுத்தலாம். ஜி-பே, போன்-பே, பேடிஎம் போன்ற யூபிஐ செயலிகளில் உள்ள பயன்பாட்டு பில் செலுத்தும் வகையின் கீழ் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் பில் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு பணம் செலுத்தலாம். மேலும், காசோலை, வரைவோலை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் 15 பகுதி அலுவலங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் உள்ள வசூல் மையங்கள் வாயிலாகவும் செலுத்தலாம். வசூல் மையங்களில் உள்ள BBPS QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் செலுத்தலாம். சென்னை குடிநீர் வாரிய பணிமனை மேலாளர்கள் கொண்டு வரும் iPoS இயந்திரங்கள் மூலம் செலுத்தலாம். மேலும், நுகர்வோர்கள் தங்களது நிலுவைத் தொகையை செலுத்துவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் 044 – 4567 4567 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு வாரியம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Drinking Water Board ,Chennai ,Chennai Drinking Water Board ,Dinakaran ,
× RELATED வளரசவாக்கம் மண்டலத்தில் கழிவுநீர்...