ஊட்டி, அக். 18: மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-24ம் ஆண்டிற்கான மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்க தொகையாக முதலாம் பரிசு ரூ.1 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.60 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.40 ஆயிரமும் வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள், மாவட்ட அளவிலான குழுவிற்கு சமர்ப்பித்து அதில் தேர்வு செய்யப்படும் சிறந்த ஒரு விவசாயி மாநில அளவிலான விருதிற்கு பரிந்துரை செய்யப்படுவார். விவசாயியிடம் கண்டிப்பாக இயற்கை வேளாண்மை மாறுதலுக்கான வேலிடிட்டி ஸ்கோப் சான்றிதழ் இருத்தல் வேண்டும். தேர்வு செய்யப்பட்ட விவசாயியின் நிலம், பயிரிடப்பட்ட தோட்டக்கலை பயிர்கள், அதன் பரப்பளவு, மகசூல், அங்கக இடுப்பொருட்கள், பயிர் அறுவடை ஆகியவை மாவட்ட அளவிலான குழுவால் கள ஆய்வு செய்யப்படும்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், தமிழ்நாடு தோட்டக்கலை இணையதளமான www.tnhorticulture.tn.gov.inல் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அளிக்க வேண்டும். எனவே நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் இவ்விருதிற்கு விண்ணப்பித்து பயனடைய வேண்டும். இவ்வாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
The post இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.