சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் 17,000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாளை அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று அரசு விடுமுறை. அதன் பின்னர் சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால், இடையில் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொள்ள பலரும் திட்டமிட்டுள்ளனர்.
அதனால் அக். 31, நவம்பர் 1, 2, 3 என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறை வருவதால் லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதும் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக இம்மாத கடைசி வாரத்தில் புதன் அல்லது வியாழக்கிழமை அன்றே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல பேருந்துகள், ரயில்களில் டிக்கெட்கள் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ரயில்களில் ஏற்கனவே முன்பதிவு அனைத்தும் முடிந்து விட்டது. இதனால் ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்கள் பேருந்துகளை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.
குறிப்பாக ஆம்னி பேருந்துகள் பண்டிகை காலங்களில் தாறுமாறாக கட்டணத்தை உயர்த்துவார்கள் என்பதால் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு இதுவரை 72 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 29ம் தேதி 21,000 பேரும், 30ம் தேதி 23,500 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பான அறிவிப்பை எப்போது வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஆலோசனை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஆலோசனை கூட்டத்தை வரும் 19ம்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எத்தனை சிறப்பு பேருந்துகளை இயக்குவது, குறிப்பாக சென்னையில் இருந்து எத்தனை பேருந்துகளை இயக்குவது என்பது குறித்து, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்தும், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தமாக 17,000 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சுமார் ஐந்தரை லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு ஊர்களுக்கு 10,500 சிறப்பு பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 19ம்தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டு அன்றைய தினமே சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்தும், பிற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் திரும்பும் வகையில் அக்டோபர் 31, நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post தீபாவளி பண்டிகைக்கு 17,000 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு: சென்னையில் இருந்து 10,500 பேருந்துகள், அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை appeared first on Dinakaran.