×
Saravana Stores

குமுளி ராஜ்குமார், மதுரை பிரமுகரிடம் நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: பரபரப்பு தகவல்கள்

திருச்சி: திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே கடந்த 15ம் தேதி இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிறுத்தாமல் வேகமாக சென்று அங்கிருந்த போலீஸ் பேரிகார்டில் மோதி நின்றது. போலீசார் காரின் அருகே சென்றனர். காரில் இருந்து வீச்சருவாளுடன் இறங்கிய நபர் போலீசாரை பார்த்து தான் பெரிய ரவுடி என்றும், நான் தான் குமுளி ராஜ்குமார், என் காரையே நிறுத்துவிங்களா என்று கேட்டு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் பரமக்குடி அருகே ஆதியேந்தல் பகுதியில் உள்ள கண்மாய்கரை அருகே காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பலை திருச்சி தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் மேலக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான குமுளி ராஜ்குமார்(45) (தேவேந்திர குல மக்கள் இயக்க தலைவர்) மற்றும் கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த இனுங்கூர் பாலு (எ) பாலசுப்ரமணியன்(45) என தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து காருடன் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் காரில் சோதனை நடத்தியதில், காரில் நாட்டு துப்பாக்கிகள் (2), வீச்சரிவாள் (2), சணல் வெடிகள் (25) இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 நபர்களை தேடி வருகின்றனர். கைதான குமுளி ராஜ்குமார் மீது 5 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு, 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், மதுரையில் முன்னாள் மண்டல தலைவர் விகே.குருசாமி மீது அடிதடி வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 24 வழக்குகள், மகன் மணி மீது 15 வழக்குகள் உள்ளன. இதற்கிடையில் கீரைத்துறையில் உள்ள இவரது வீட்டில் நேற்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மணியின் நண்பர்களான பழனிமுருகன், முனியசாமி ஆகிய 2 பேரும், விகே.குருசாமிக்கு பாதுகாப்பாக அவரது வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அவர்களிடம் நடத்திய சோதனையில், வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதன்பேரில் விகே.குருசாமி, அவரது மகன் மணி, பழனிமுருகன், முனியசாமி ஆகிய 4 பேர் மீதும் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பழனிமுருகன், முனியசாமியை கைது செய்தனர்.

The post குமுளி ராஜ்குமார், மதுரை பிரமுகரிடம் நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kumuli Rajkumar ,Trichy ,Pettavaitalai, Trichy district ,Dinakaran ,
× RELATED தேவேந்திரகுல மக்கள் இயக்க தலைவர் குமுளி ராஜ்குமார் பரமக்குடியில் கைது