×
Saravana Stores

நார்சிசம்… தன்வழிபாட்டு ஆளுமைக் கோளாறு!

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

அமெரிக்க உளவியல் சங்கம் (American Psychiatric Association) வரையறுத்துள்ள மனநலக் கோளாறுகளின் பிரிவுகள் தொகுதி ஏபிசி (Cluster A,B,C) பட்டியலில் B பிரிவில் வரக்கூடிய இந்தக் கோளாறு அதிக வலிமை கொண்டதாக இருக்கிறது. மற்றவர்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. அதிவலிமையாக (Forceful) செயல்படக் கூடியதாகவும், சமூகத்துக்கு எதிராக செயல்படக்கூடிய பண்புகளையும் (Anti-Social) கொண்டுள்ளது. மேலும், பெருமித உணர்வு (Grandiosity), மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பது (Attention seeking) மற்றும் அடுத்தவர்களுடைய உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கக் கூடாது போன்ற பண்புகளையும் இந்த நோய் தாக்கியவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று வரையறுத்துக் கூறப்படுகிறது.

இப்பட்டியலில் C பிரிவின் கீழ் வரும் தவிர்ப்பு மற்றும் சார்புத்தன்மை (Avoident, Dependent) கொண்டவர்கள் பெரும்பாலும் நார்சிஸ்ட்டுகளின் இலக்குகளாக ஆகிறார்கள். குறிப்பாக, அதிக உணர்வுப்பூர்வமானவர்கள், உறவுகளில் மிகவும் சார்ந்து இருப்பவர்கள், ஏக்கம் மிக கொண்டவர்கள் (Vulnerability), பாதுகாப்பற்ற மனநிலையைக் (Insecurity) கொண்டவர்கள் போன்ற எளிய அப்பாவிகளும், கருணை நிறைந்தவர்களுமே இவர்களுக்கு இரையாகிறார்கள் என்பது வேதனை.

சமகாலத்தில் மாற்றுப்பாதை என்ற பெயரில் சிலர் நார்சிசம் ஒரு வெற்றிகரமான வாழ்வியல் தந்திரம் என்கிறார்கள். நார்சிஸ்ட்டுகள் சிலர் வெற்றியாளர்களாக, சிறந்த நிர்வாகிகளாக உருவாக்கியிருக்கிறார்கள் என உதாரணங்களை அடுக்குகிறார்கள். ஆனால், உண்மையில் இதுவொரு ஆபத்தான மனநலக் கோளாறு. ஏனெனில், அடுத்தவர்களை அதிகம் பாதிக்கக்கூடியது. ஆகவே, உலகம் முழுதும் உளவியல் மேதைகள், மனநலப் பயிற்சியாளர்கள் இது குறித்து விவாதித்து வருகிறார்கள்.

இந்த நச்சுத்தன்மையான ஆளுமைப் பண்பின் ஆதிக்கம் நடுத்தர வயதுகளில் மிக அதிகமாகக் காணப்படுகிறது என அறிகிறோம். மத்திய வயது (Middle adulthood) எனப்படும்
40-50 வரையிலான இப்பருவம் மிக ஆபத்தான பருவம் (Dreaded age) என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அடுத்தவரை அதிகாரம் செய்வது, தன்னுடைய வெற்றியை முதன்மையாகக் கருதுவது போன்ற பண்புகள் அந்த வயதுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று உளவியல் கூறுகிறது.

இதில் சாதனை புரியாதவர்கள், காலம் கடந்துவிட்ட வெறுமையை (Empty shell state) உணர்கிறார்கள். பலருக்கும் விட்டதை எட்டிப் பிடிக்க வேண்டும் என்ற வெறி சுயநலமாக உருவெடுக்கும். இந்த வயதில் சாதித்தவர்களும் மிகவும் கர்வத்தோடு அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டே இருக்கும் ஆதிக்க (Dominanant) மனநிலையோடும் இருக்கிறார்கள். எனவே, இவ்விரு வகையினருமே மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தவறுகிறார்கள். உளவியல் மேதை எரிக்சன், ‘தேங்கி விடுதல் (Stagination) vs உருவாக்கம் (Generation) என இரு நிலைகளில் ஒன்றில் அவர்கள் இருக்கிறார்கள். எனவே, இக்காலகட்டம் சாதனைக்குரியதும், ஆபத்தானதுமாகிறது’ என்கிறார்.

மனநலப் பயிற்சியாளர் தானிஷ் சுயதொழுகைகைக் கோளாறு உள்ளவரை நடைமுறையில் எப்படி இனம் காணலாம் என விளக்குகிறார். நீங்கள் ஏதேனும் ஒரு பிரச்னையில், கவலையில் தூங்க முடியாமல் அழுது கொண்டிருப்பீர்கள். அந்த நேரத்தில் அவர் நிம்மதியாக தூங்கிவிடுவார். அதேபோல உணர்வுரீதியான ஆதரவை (Emotional Suppor ) உங்களுக்குக் கொடுக்க மாட்டார். மனம் ஒட்டாது விலகியே இருப்பார். ஆனால் உங்களிடம் உள்ள உணர்வுத்திறனை உறிஞ்சி எடுக்கும் வகையில் மனவருத்தத்தைத் தருவார்.

நெருங்கிய உறவில் என்றால் Triangulation எனும் முப்பரிமாணப் போலிமைத் தோற்றத்தை உருவாக்குவார். அவர்களுக்கு வேறு யாரோ இருக்கிறார்கள் என்பது போல் இருப்பார்கள். கிடைத்தது போதாது என்ற நிலையிலே எப்பொழுதும் புதியவற்றை தேடிக் கொண்டே இருப்பார்கள். இருப்பவர்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் தக்க வைத்துக்கொண்டு, புதியவர்களையும் அடையும் தந்திரம் இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

அடுத்தவர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டே இருக்கும் இவர்களுக்கு எவ்வளவு பாசத்தை நீங்கள் கொடுத்தாலும் அவர்களுக்குப் புரியாது. போதாமையோடு இன்னும் பாராட்டலாமே அவ்வளவுதானா என்ற கேலியோடு உங்களைப் புறக்கணிக்க வாய்ப்பு அதிகம். பொறாமையுணர்வும் இருப்பதால், அதை மறைக்க அவர்கள் எடுக்கும் ஆயுதங்களே உண்மைகளைத் திரிப்பது (manipulation) மற்றும் சுயசந்தேகத்தை உருவாக்குவது (Gas lighting) ஆகியவை. நம் சுயமரியாதையையும், மனநிம்மதியையும் குலைக்கும் இச்செயல்களுக்கு எதிர்வினை ஆற்றினால், அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் உங்களையே over react செய்வதாக குறை சொல்வார்கள்.

இதர மனநலச் சீர்கேடுகளில் இருந்து நார்சிசம் மிகவும் வேறுபட்டது. ஏனெனில், அவர்கள்தான் சரியாகத்தான் இருக்கிறோம் என்று தீர்க்கமாக நம்புகிறார்கள். உளவியலின் ஆரம்பக்கட்ட ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கவே பயனாளியிடம் ‘எனக்கு ஒரு குறைபாடு இருக்கிறது அதனை ஏற்றுக் கொள்கிறேன். சரி செய்ய முயற்சி செய்கிறேன்’ என்ற ஒத்துழைப்பும், இணக்கமும் மிக அவசியமாகிறது. ஆகவேதான், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. கூடுதலாக, நீங்கள் நார்சிஸ்ட்டுகளின் குடும்ப உறுப்பினர்களிடம், நெருங்கிய நண்பர்களிடம் இது பற்றிப் பேசித் தீர்க்கலாம் என்றால் அதற்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்றொரு அதிர்ச்சியான அறிக்கை சொல்கிறது.

அதாவது, அறிவியல் கூற்றுப்படி நார்சிசம் பெரும்பாலும் பரம்பரை மரபணு காரணமாகவே வருகின்றது. எனவே, அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் அதே பண்புகளோடுதான் இருப்பார்கள். ‘நார்சிஸ்ட் குடும்பம்’ என்றே சொல்லலாம். நீங்கள் எத்தனைத் தன்மையாக எடுத்துக் கூறினாலும் உங்களின் மனக்காயங்களை அவர்களால் உணரவே முடியாது. எல்லோருமாக சேர்ந்து உங்களையே திருப்பி அடிப்பார்கள். அவர்களைப் போன்றே நார்சிச நண்பர்களையும் வைத்திருப்பார்கள். ஆக, யாரிடமும் போய் நீங்கள் உதவி கேட்டாலும் கிடைக்காது. யாரும் உங்களை நம்ப மாட்டார்கள். அவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்களை, வேதனைகளை உங்களால் நிரூபிக்கவே முடியாது.

பொதுவான மனிதர்களிடம் இவர்கள் மிக தன்மையாக நடந்து கொள்வார்கள். அத்தனை தந்திரமான தர்க்கங்களைக் கொண்டிருப்பதால் நார்சிஸ்ட்டுகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை (Victims) அபூர்வ சகோதர்கள் நாகேஷ், ஜெய்சங்கர் இதர வில்லன்களைப் போல நார்சிசக் கூட்டம் வரிசையாக கட்டம் கட்டித் தாக்கக்கூடும்.

கடைசியில், தங்கமகன் திரைப்படத்தில் நாயகன் தனுஷின் தந்தை கதாபாத்திரம் கே.எஸ்.ரவிக்குமார் போலாகிவிடுவோம். அவரின் சகோதரி மகன் பெரும் பணம் கொடுத்ததை இல்லை என்று மறுத்து அவரையே குழம்பித் தவிக்க வைத்து விடுவான். அவரின் நினைவுத் திறனை சந்தேகிக்க வைத்து பித்துப் பிடித்து சாக வைத்து விடுவான். அதே நிலை ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு எப்பொழுதும் நார்சிஸ்ட்டுகளை அணுக வேண்டும் என்பதற்காகவே இதைப் பகிர்கிறோம். ஏனெனில், பாதிக்கப்படும்போதும் மனது மட்டுமல்ல உடலும் சீர்கேடாகிறது.

நாம் ஒரு நார்சிஸ்ட்டோடு பழகிக் கொண்டிருக்கிறோம் என்பதை சில குறிப்புக்கள் மூலம் உணரலாம். நார்சிஸ்ட் தனக்குத் தேவையானவற்றை நம் மூலம் செய்துக் கொள்வார். அவருக்குத் தேவையானபோது நம்மிடம் பேசுவார். இப்படி நம்மைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார். ஏதோ தவறாக இருக்கிறதே என்று நம் உள்ளுணர்வு (Intution) பதறும். எனவே, அவர் உடனிருந்தாலே ஒரு நடுக்கமான உணர்வு நம்மோடு இருக்கும்.

மேலும், தன்தொழுகையாளர்கள் தற்கால மகிழ்ச்சி குறித்தே கவனமாக இருப்பர். மெல்ல மெல்ல அன்பைக் கொடுப்பதுபோல் வீழ்த்தி எதிராளியைத் தனக்கான அடிமையாக மாற்றி விடுவார்கள். விழிப்புணர்வு பெற்று எதிர்க்க ஆரம்பித்தால் பலன் இருக்காது. நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை அப்படியே மறுப்பார்கள். பேச்சை மாற்றுவார்கள் அல்லது மௌனப் புறக்கணிப்பைக் (Silent treatment) கொடுப்பார்கள்.

சில நேரங்களில் அப்போதைக்கு சமாளிக்க, ‘எதிர்காலத்தில் எல்லாம் மாறிவிடும்’ என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி கொண்டே இருப்பார்கள் ஆனால், நீண்ட காலம் வாழ்ந்து பார்த்தாலும் ஒரு மாற்றமும் ஏற்படாது. ‘மாறுகிறேன்’ என்றதும் ஒரு போலித்தந்திரமே என்று உணரும் போது உங்கள் வாழ்க்கையையே இழந்து இருப்பீர்கள்.

The post நார்சிசம்… தன்வழிபாட்டு ஆளுமைக் கோளாறு! appeared first on Dinakaran.

Tags : Kungumum ,Jayashree Kannan Agamemnon ,Akshay Prakarla ,American Psychiatric Association ,Dinakaran ,
× RELATED மகனால் இயற்கை விவசாயத்திற்கு மாறிய ஐ.டி ஊழியர்!