×
Saravana Stores

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை மின்னல் வேகத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டு: 95 சதவீதம் மழைநீரை அகற்றும் பணி நிறைவு

சென்னை: சென்னையை புரட்டி போட்ட கனமழையால், தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் மின்னல் வேகத்தில் செயல்பட்டதன் பலனாக 95 சதவீத மழைநீரை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளது. தங்கள் நலனை பொருட்படுத்தாமல் முழுவீச்சில் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏரிக்குள் கட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடந்த திங்கட்கிழமை பெய்ய ஆரம்பித்த கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கின. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து துறை ஊழியர்களும் முழுவீச்சில் மழை நீரை அகற்றும் பணியில் இறங்கினர். இதனால் சென்னையில் மழைநீர் தேங்கிய பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தது. குறிப்பாக, சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றினர்.

அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்தனர். கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டதன் பலனாக நேற்றிரவே முக்கிய சாலைகளில் மழைநீர் அகற்றப்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் எல்லாம் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை அகற்றும் பணியும் துரிதமாக நடைபெற்றது. இதனால் கிட்டத்தட்ட சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குள் மழைநீர் அகற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை முதல் மழையின் தாக்கம் குறைந்தது.

இதை தொடர்ந்து தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, மின்வாரியத் துறை என அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகின்றனர். இதன் பலனாக நேற்று காலைக்குள் கிட்டதட்ட 95 சதவீத மழைநீர் அகற்றும் பணி நிறைவடைந்தது. இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதுவும் பள்ளிக்கரணை, அடையாறு, கூவம் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டுமே இன்னும் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டியுள்ளது. இப்பகுதி மக்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழைநீர் வடிந்து இயல்பு வாழ்க்கைக்கு சென்னை மக்கள் திரும்பினர். சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 542 இடங்களில் 501 இடங்களில் முழுமையாக தண்ணீர் வடிந்தது. மீதமுள்ள இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. நேற்று இரவுக்குள் அந்த பணிகளும் முடிவடையும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைநீர் அகற்றும் பணியில் மின்னல் வேகத்தில் இரவு பகல் பாராமல் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மழை தொடங்கியதில் இருந்து தற்போது வரை மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். மழைநீர் தேங்கிய இடங்களுக்கு எல்லாம் நேரடியாக சென்று மீட்பு பணிகளை பம்பரம் போன்று அவர் சுழன்று பணியாற்றியது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மட்டுமல்லாது மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், போலீஸ் கமிஷனர் அருண், தீயணைப்புத்துறை இயக்குநர் ஆபாஷ்குமார், இணை இயக்குநர் சத்தியநாராயணன் மற்றும் அதிகாரிகள் கொட்டும் மழையில் பணிகளை தீவிரப்படுத்தினர்.

* 12 லட்சம் பேருக்கு உணவு
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால், கடந்த 2 நாட்களில் மட்டும் 77 மரங்கள் விழுந்தது. இந்த மரங்கள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. மொத்தம் 300 நிவாரண முகாம்களில், 27 இடங்களில் 944 பேர் தங்கியுள்ளனர். சென்னை முழுவதும் நடைபெற்று வரும் 100 மருத்துவ முகாம்களில் 5,657 பேர் பயனடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் 12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1,293 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 77,877 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கிய 542 இடங்களில் 501 இடங்களில் முழுமையாக தண்ணீர் வடிந்தது. மீதமுள்ள இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

* பம்பரம் போல் சுழன்றி பணியாற்றிய துணை முதல்வருக்கு பாராட்டு
* மழையால் பாதிக்கப்பட்ட 12 லட்சம் பேருக்கு உணவு
* 100 இடங்களில் மருத்துவ முகாம்கள்

The post சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை மின்னல் வேகத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டு: 95 சதவீதம் மழைநீரை அகற்றும் பணி நிறைவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Corporation ,Fire Department ,Power Board ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகை; பட்டாசுளைக்...