×
Saravana Stores

பெற்ற மகளை மிரட்டி பலாத்காரம்; கொடூர தந்தைக்கு சாகும் வரை ஆயுள்: ஊட்டி கோர்ட் உத்தரவு


ஊட்டி: பெற்ற மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தை 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால், இரு பெண் குழந்தைகளும் தந்தையின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு 2வது குழந்தை பள்ளிக்கு சென்ற நிலையில், குடிபோதையில் வீட்டிற்கு வந்த தந்தை தனியாக இருந்த முதல் குழந்தையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் கூறக்கூடாது, அவ்வாறு கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.

பயந்துபோன சிறுமி யாரிடமும் எதுவும் கூறாமல் அச்சத்துடனேயே இருந்துள்ளார். அவர் யாரிடமும் தெரிவிக்காததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிறுமியை பலமுறை தந்தை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதனிடையே உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தையே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.

இதனைதொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தந்தையை கைது செய்தனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கம் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசிடம் இருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.

The post பெற்ற மகளை மிரட்டி பலாத்காரம்; கொடூர தந்தைக்கு சாகும் வரை ஆயுள்: ஊட்டி கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nilgiri district, ,Kunnur ,Dinakaran ,
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரிய புல்...