×

அன்று சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியர்… இன்று தொழில்முனைவோர்!

நன்றி குங்குமம் தோழி

ஃபேஷன் என்பது ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் தகுந்தாற்போல ஒவ்வொன்றையும் புதுப்பித்துக்கொண்டே இருப்பது. அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு பரிணமிக்கின்ற உடைகளையும் நகைகளையும் மற்ற அலங்காரப் பொருட்களையும் அணிந்து கொண்டு, இப்போ இதுதான் ஃபேஷன் என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். இப்படி ஃபேஷனில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் புதுமையான பொருட்களை பயன்படுத்த விரும்புவார்கள். அவர்களுக்காகவே புதுவிதமாக பாலிமர் க்ளேவில் நகைகளை தயாரித்து புதுமையை கொண்டு வந்திருக்கிறார், ‘லச்சா ஃபேஷன்’ நிறுவனரான ராஜலட்சுமி.

“10 வருடங்களுக்கு முன் எல்லோரும் அணிந்திருந்த மாதிரியான நகைகளை இப்போது யாரும் அணிவதில்லை. நானும் ஆரம்பத்தில் குயிலிங் பேப்பரில்தான் நகைகளை செய்து கொண்டிருந்தேன். ஆனால் அதில் ஏதாவது புதுவிதமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் இருந்தது. அதனால்தான் நான் பாலிமர் க்ளேவில் நகைகளை தயாரிக்க ஆரம்பித்தேன்’’ என்றவர், ஃபேஷன் ஜுவல்லரி துறையில் தனது வெற்றியை பகிர்ந்து கொள்கிறார். “பெரும்பாலான பெண்களை போலவே எனக்கும் திருமணத்திற்குப் பிறகு என்ன செய்வதென்றே தெரியாமல் தான் இருந்தது.

எனக்கென்ற ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டுமென்று நினைத்தேன். எனக்கு சிறுவயதிலிருந்தே கலை மற்றும் கைவினைப் பொருட்கள் மேல் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. அப்படித்தான் ஆரம்பத்தில் குயிலிங் பேப்பரில் நகைகளை செய்ய தொடங்கினேன். நகைகளை செய்து அருகில் உள்ள கடைகளில் கொடுத்து விற்பனை செய்தேன். அதில் கிடைத்த பணம் குறைவானதாக இருந்தாலும் அது எனக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுத்தது. மேலும் இதை மேம்படுத்த நினைத்தேன்.

அடுத்தடுத்து ட்ரெண்டிங்கில் இருந்த நகைகளை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தேன். அதன் மூலம் பலர் ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தார்கள். என்னுடைய தயாரிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் எனக்கு தெரிந்த இந்தக் கலையை மேலும் பயனுள்ளதாக மாற்ற நினைத்தேன். அதற்கு நான் தேர்வு செய்த பாதை ஆசிரியர் பணி. குறிப்பாக சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியராக மாறினேன்’’ என்றவர், சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியராக மாறிய காரணத்தை விவரித்தார்.‘‘சாதாரண குழந்தைகள் என்றால் படிப்பார்கள், வேலைக்கு செல்வார்கள்.

அவர்களுக்கான எதிர்காலத்தை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் சிறப்புக் குழந்தைகள் அப்படி இல்லை. அவர்களின் கடைசிக் காலம் வரை யாராவது உடன் இருக்க வேண்டும். அவர்களுக்கும் ஒரு வருமானம் ஏற்படுத்தி தர நினைத்தேன். கையில் சம்பாத்தியம் இருந்தால், அதன் மூலம் அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். அதனால் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் வொகேஷனல் ட்ரைனராகவும், ஆர்ட்ஸ் அண்ட் க்ராஃப்ட்ஸ் ஆசிரியராகவும் பணியில் சேர்ந்தேன்.

எனக்கு தெரிந்த இந்தக் கலையை சிறப்புக் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்பதில் எனக்கு பெரும் சந்தோஷமாகவும் மனசுக்கு திருப்தியாகவும் இருந்தது. முன்பெல்லாம் சிறப்புக் குழந்தைகளுக்கு வொகேஷனல் ட்ரைனிங் என்றாலே ஊதுவர்த்தி, சோப்பு தயாரிப்புதான் செய்ய சொல்லித் தருவார்கள். ஆனால் அவர்கள் அதையும் தாண்டி நிறைய புதுமையான விஷயங்களை செய்யக்கூடிய திறன் உள்ளவர்கள். எனவே அவர்களுக்கு க்ளே மூலம் கலைப்பொருட்களை எப்படி செய்வதென்று சொல்லிக் கொடுத்தேன்.

அதன் மூலம் உருவ பொம்மைகள், வடிவங்கள், நகைகள், அலங்காரப் பொருட்கள் என நிறைய விதமான பொருட்களை அவர்களால் தயார் செய்ய முடியும். ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது கொஞ்சம் சவாலான விஷயம். ஆனாலும் அந்தக் குழந்தைகளுக்கு இந்தக் கலையை சொல்லிக் கொடுப்பது எனக்கு திருப்தியாக இருந்தது. அதற்கு கொஞ்சம் பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையும் வேண்டும். பொதுவாக செய்யக்கூடிய ஊதுவர்த்தி, சோப்பு போன்ற தயாரிப்புகளை விட இது போன்ற க்ளே சார்ந்த கலைப்பொருட்களை செய்யும்போது அவர்களுக்கு நல்ல ஆர்ட் தெரபியும் கிடைக்கிறது.

இது அவர்களின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் உதவுகிறது. நான் சொல்லிக் கொடுக்கின்ற மாடலை அவர்கள் அப்படியே செய்வார்கள். மேலும் அவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருட்களை சந்தைப்படுத்தும் போது அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் அது தேடித் தருகிறது. இது அவர்களின் பெற்றோர்களுக்கும் ஒருவித ஆறுதலை கொடுத்தது” என்றவரிடம் ஃபேஷன் நகைகள் செய்வதை தாண்டின மற்றொரு கருணை முகமும் இருப்பது தெரிகிறது.“இந்தக் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கும் பயணத்தில் இருக்கும் போதுதான் கொரோனா பேரிடர் வந்தது.

லாக்டவுனால் வீட்டிலேயே முடங்க வேண்டிய நிலை. வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், மீண்டும் நகைகளை தயாரிக்க நினைத்தேன். ஆனால் அன்றைய டிரெண்ட் வேறாக மாறியிருந்தது. நான் ஆரம்பத்தில் பயன்படுத்திய மூலப்பொருட்கள் கொண்டு செய்யப்படும் நகைகள் அப்போது டிரெண்டிங்கில் இல்லை. புதுவிதமாக முயற்சி செய்ய நினைத்தேன். இந்த சமயத்தில்தான் பாலிமர் க்ளே பற்றி எனக்கு தெரிய வந்தது. ஆரம்பத்தில் வெளிநாடுகளில்தான் இந்த பாலிமர் க்ளேவினை பயன்படுத்தி நகைகள் செய்யப்பட்டது.

எனவே நாமும் இதனை முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. உடனே ஆர்வத்துடன் பாலிமர் க்ளேவினை பற்றி தெரிந்து கொண்டு, அதை பயன்படுத்தி நகைகளை செய்யவும் கற்றுக்கொண்டேன். ஆரம்பத்தில் பாலிமர் க்ளேவினை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தி நகைகளை செய்வது கொஞ்சம் சிரமமானதாகத்தான் இருந்தது. இவை எளிதில் உடையக்கூடியது. லேசாக அழுத்தம் கொடுத்தால் நசுங்கிடும். அதனை மீள் தன்மை பக்குவத்திற்கு மாற்ற வேண்டும்.

அதன் பிறகு அதில் நாம் விரும்பும் பொருட்களை தயாரிக்கலாம். இந்த முறையில் தயாரிக்கப்படும் நகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் எப்போதும் உடையாமல் நீண்டகாலத்திற்கு அப்படியே இருக்கும். நகைகளை தயாரிக்கும் போது அதில் நுணுக்கமான வேலைப்பாடுகள் செய்ய வேண்டும் என்பதால், மிகவும் பொறுமையோடுதான் ைகயாள வேண்டும். அப்போதுதான் அழகான, நேர்த்தியான நகைகள் கிடைக்கும். பலருக்கு பாலிமர் க்ளேவினால் செய்யும் பொருட்கள் கெட்டுவிடுமா என்ற கேள்வி இருந்தது.

சரியான பதத்தில் நகைகளை தயார் செய்தால் என்றும் உடையாமல் உறுதியாக இருக்கும்” என்றவர், ஒரு தொழில் நீடித்து நிற்பதின் அவசியத்தை கூறுகிறார். “ஃபேஷன் துறை மட்டுமில்லை எந்த துறையாக இருந்தாலும், நம்முடைய தொழிலில் விடாமுயற்சியை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருங்க. அங்கீகாரம் உங்களை தேடி வரும். வேலை சிறியதாக இருந்தாலும் சரியான உழைப்பிருந்தால் அதனை மேம்படுத்தலாம்.

தொழில் செய்வதற்கு பெரிய அளவிலான இடமோ மூலப்பொருட்களோ தேவையில்லை. எல்லாம் நம்மை சுற்றித்தான் அடங்கி இருக்கு. நான் இந்தத் தொழிலை ஆரம்பித்த போது எனக்கு உறுதுணையாக யாரும் இல்லை. ஆனாலும் நான் தன்னம்பிக்கையை இழக்காமல் எனது உழைப்பை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதே போல் ஒரு தொழிலில் ஒரே மாதிரியான பொருட்களை மட்டுமே தயாரித்துக் கொண்டிருந்தால் நீண்ட நாட்களுக்கு தனித்து நிற்க முடியாது. தொழிலில் புதுமையை புகுத்த வேண்டும். அப்போதுதான் நாம் தனித்து தெரிவோம்.

நான் இந்த க்ளேவில் 3D மாடல் உருவங்கள், அலங்காரப் பொருட்களும் செய்து வருகிறேன். மேலும் இதில் வேறு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையும் செய்யும் திட்டத்தில் இருக்கிறேன். இந்தக் கலையைதான் நான் சிறப்புக் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கும் கற்றுக் கொடுக்கிறேன். என்னிடம் பயின்றவர்கள் இதன் மூலம் அவர்களின் திறனை மேம்படுத்தி வருகிறார்கள். மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக எனக்கு வரும் ஆர்டர்களை அவர்களுடன் பகிர்ந்தும் கொள்கிறேன். தற்போது இதுவே என்னுடைய தினசரி தொழிலாக மாறினாலும், சிறப்புக் குழந்தைகளுக்கு இந்தக் கலையை கற்றுக் கொடுப்பதை நான் நிறுத்தவில்லை.

அவர்களின் வீட்டிற்கே சென்று பயிற்சி அளிக்கிறேன். கடந்த பத்து வருடங்களாக வீட்டில் இருந்தபடிதான் இந்த பிசினசை செய்து வந்தேன். இப்போது கடை ஒன்றை விரைவில் திறக்க இருக்கிறேன். மேலும் பலருக்கு வர்க்‌ஷாப் மூலம் பயிற்சி அளிக்கவும் இருக்கிறேன். விடாமுயற்சியுடன் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதுதான் என் எண்ணம். எல்லா பெண்களுக்கும் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். உங்கள் வீட்டு ஆண்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறவர்களாகவே இருந்தாலுமே கூட, உங்களுக்கென்று ஒரு வருமானம் அவசியம் வேண்டும். உங்களுக்கான தனித்திறன்தான் உங்களை அடையாளப்படுத்தும்” என்றார் ராஜலட்சுமி.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post அன்று சிறப்புக் குழந்தைகளின் ஆசிரியர்… இன்று தொழில்முனைவோர்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi Fashion ,
× RELATED ஷூ தயாரிப்பில் மேஜர் ரோல் பெண்கள்தான்!