சென்னை: மழை குறைந்ததாலும் துரிகதியில் பணி நடந்ததாலும் வேளச்சேரி, தரமணியில் மழைநீர் வடிந்துள்ளது. வடகிழக்கு பருவமழையினால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வேளச்சேரியில் தாழ்வான பகுதிகளான ராம்நகர், பேபி நகர், டான்சிநகர் மற்றும் தரமணி தந்தை பெரியார் நகர், பாரதியார் நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. மேலும் சாலையைவிட தாழ்வாக உள்ள வீடுகளில் மழை தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று இரவு மழையின் அளவு குறைந்ததாலும் மாநகராட்சி ஊழியர்கள் துரிதகதியில் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டதாலும் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழைநீர் வடிந்துள்ளது. இதையடுத்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேளச்சேரி ராம்நகர், பேபி நகர், டான்சி நகர் மற்றும் சுற்றியுள்ள தாழ்வான பகுதியில் கடந்தாண்டு மழையின்போது வீட்டில் கார்களை நிறுத்தி வைத்ததால் மழைநீரில் மூழ்கி பழுதானது. இந்த மழையின் போது வாகனங்கள் பழுதாகிவிடும் என்பதால் பாதுகாப்பாக மேம்பாலங்களில் நிறுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கூறினர்.
The post மழை குறைந்ததாலும் துரிகதியில் பணி நடந்ததாலும் வேளச்சேரி, தரமணியில் மழைநீர் வடிந்தது..!! appeared first on Dinakaran.