×
Saravana Stores

கூடலூர் அருகே விவசாயிகளின் நிலங்கள் வன நிலமாக மாற்றப்பட்டதை கண்டித்து போராட்டம்

*போஸ்பாரா பகுதி மக்கள் முடிவு

கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட போஸ் பாரா, மச்சிக்கொல்லி பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் வனநிலமாக மாற்றப்பட்டுள்ளது பொது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வாழ்ந்து வரும் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலங்கள் வனநிலமாக அறிவிக்கப்பட்டு வனத்துறையால் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று போஸ் பாரா பகுதியில் உள்ள தேவாலய வளாகத்தில் கிராம மக்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேவாலய பங்குத்தந்தை தாமஸ் சார்லி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விமலகிரி பங்கு தந்தை ரெஜி, தேவர் சோலை பேரூராட்சி துணைத் தலைவர் யூனஸ் பாபு, வழக்கறிஞர் மேத்யூ, வார்டு கவுன்சிலர் ஜோஸ், முன்னாள் ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் ஏஜே தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையடுத்து, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் விவசாயிகளின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த நடவடிக்கையை கைவிடக் கோரி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் கூடலூரில் உள்ள வனத்துறை தீர்வு (செட்டில்மென்ட்) அலுவலரிடம் மனு அளித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க கோருவது என்றும் அவ்வாறு தீர்வு கிடைக்காத பட்சத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அனைவரும் இணைந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கூடலூர் அருகே விவசாயிகளின் நிலங்கள் வன நிலமாக மாற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Bhospara ,Macchikolli ,Dewar Solai Municipality ,Dinakaran ,
× RELATED கூடலூர் அருகே சாலை ஓரத்தில் காட்டு யானைகள் முகாம்; வாகன ஓட்டிகள் அச்சம்