*அண்ணன் செய்த தவறுக்கு குழந்தைகளை தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம்
சேலம் : சேலம் அருகே அக்கா, தம்பியை கழுத்தறுத்து கொன்ற சித்தப்பாவை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். தனது மனைவியிடம் அண்ணன் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் அவரது குழந்தைகளை கொன்றதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகேயுள்ள கூட்டாறு ஒடுவன்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). விவசாயி. இவரது மனைவி சித்ரா. இவர்களது குாந்தைகள் நவீனா (17), சுகன் (14). நவீனா பிளஸ்2வும், சுகன் 9ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இவர்கள் நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தனர். பின்னர் சாப்பிட்டு விட்டு, வீட்டின் அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் அரளி பூ பறிப்பதற்காக இருவரும் சென்றனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து இருவரும் அலறும் சத்தம் கேட்டது. உடனே சிறிது தூரத்தில் பூ பறித்துக்கொண்டிருந்த தந்தை ராஜா ஓடிச்சென்றார். அப்போது அவரது சித்தப்பா மகனான தம்பி தனசேகரன் (35), 2 குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜாவையும் கத்தியால் தலையில் வெட்டி விட்டு தனசேகரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு மனைவி சித்ரா மற்றும் ஊர் மக்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த குழந்தைகளை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சேலம் சரக டிஐஜி உமா, எஸ்.பி. கவுதம்கோயல் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கூடுதல் எஸ்.பி.அண்ணாதுரை, ரூரல் டிஎஸ்பி தேன்மொழி, பனமரத்துப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜா சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தப்பி ஓடிய தனசேகரனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 2 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்ய காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் சொத்து தகராறில் இருவரையும் தனது சித்தப்பா மகனான தம்பி கொன்று விட்டதாக ராஜா கூறினார். சொத்துக்காக இந்த இரட்டைக்கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அப்படியே இருந்தால் கூட அண்ணன் ராஜாவைத்தான் கொலை செய்திருக்க வேண்டும், குழந்தைகளை ஏன் கொலை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. தலைமறைவான தனசேகரனை பிடித்தால்தான் உண்மை நிலை தெரியவரும் என்பதால் அவரை தனிப்படை போலீசார் விடிய விடிய தேடினர்.
நேற்றுகாலை பனமரத்துப்பட்டி வழியாக வரும் முதல் பஸ்சில் ஏறி சேலத்திற்கு தப்பி சென்று விடலாம் என நினைத்த தனசேகரன், பஸ் ஏறுவதற்கு காட்டுக்குள் இருந்து வெளியே வந்தபோது அங்கிருந்த தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், 2 குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்தது ஏன்? என்ற தகவலையும் அவர் போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.
‘‘அரளிப்பூ விவசாயம் செய்து வரும் தனசேகரனுக்கு ஜனனி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ராஜாவின் வீடும், தனசேகரன் வீடும் அருகருகே இருக்கிறது. இந்நிலையில் தம்பி தனசேகரனின் மனைவியுடன் ராஜா தவறான உறவு வைத்துக்கொள்ள முயற்சிகள் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலையும் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளார். இதுகுறித்து ஜனனி, கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகரன், அரளிப்பூ பறிக்க வந்த குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தாய் மற்றும் உறவினர்கள் நேற்று அரசு மருத்துவமனையில் திரண்டனர். அப்போது இக்கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள், திடீரென நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘இந்த கொலையில் தனசேகரன் மட்டுமே ஈடுபட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடித்து வைத்துள்ளனர். ஆனால் தனசேகரின் மைத்துனர் கார்த்தி என்பவருக்கும் தொடர்பு உள்ளது.
அவர் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அவரை வழக்கில் சேர்க்கவில்லை. அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும். அதுவரை உடல்களை வாங்க மாட்டோம்,’’ எனக் கூறினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் சமாதானம் செய்தனர். பின்னர் 2 குழந்தைகளின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நல்லமுடிவாக யோசித்து சொல்…
தந்தை செய்த தவறால் உயிரை இழந்த குழந்தைகள்
அக்கா, தம்பி கொலை சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்றுமுன்தினம் காலை 6 மணியளவில் தனசேகரனின் மனைவியை தவறான உறவுக்கு ராஜா அழைத்துள்ளார். அந்த பெண் மறுக்கவே நல்ல முடிவாக யோசித்து சொல் என கூறிவிட்டு ராஜா வெளியே சென்று விட்டார். இதுபற்றி கணவர் தனசேகரனிடம் அவரது மனைவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனசேகரன் நேராக அண்ணன் ராஜாவிடம் சென்று, ஏன் எனது மனைவியை அழைத்தாய்? என கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது அப்படித்தான் அழைப்பேன் என கூறி ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் மாலை 5.30 மணியளவில் நவீனாவும் தம்பி சுகனும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு பூ பறிக்க சென்றனர். அப்போது, இன்னொரு பகுதியில் உள்ள வயலில் தனது தாயுடன் நவீனா இருந்தார். தோட்டத்தில் தனியாக இருந்த சுகனிடம் தனசேகரன், உனது தந்தை எனது மனைவியிடம் தவறாக பேசுவது நியாயமா? இதனை தட்டிக்கேட்க மாட்டீர்களா? என கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது சுகனுக்கும் தனசேகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் அங்கிருந்த இரும்பு ராடை எடுத்து சுகனை தனசேகரன் தாக்கிவிட்டு கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்துள்ளார். அப்போது தம்பியின் சத்தம் கேட்டு நவீனா சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளார். அங்கு தனசேகரன் தம்பியை கொலை செய்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். நவீனா பார்த்து விட்டதால் அவரையும் தனசேகரன் கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கு வந்த ராஜாவையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தந்தையின் பெண்ணாசையால் இரு குழந்தைகளின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post சேலம் அருகே நடந்த பயங்கர சம்பவம் கழுத்தை அறுத்து அக்கா, தம்பியை கொன்ற சித்தப்பா அதிரடி கைது appeared first on Dinakaran.