திருவண்ணாமலை, அக்.16: கன மழை எச்சரிக்கையால், திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல 16.10.2024 (இன்று) இரவு 8 மணி முதல் நாளை (17ம் தேதி)மாலை 5.38 வரை உகந்த நேரம் அமைந்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 15.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை இருக்க வாய்ப்பிருப்பதாகவும், ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வரும் முதியவர்கள், குழந்தைகள், உடல் நலிவுற்றவர்களுக்கு மழையால் பாதிப்பு ஏற்படும் என்பதால், முன்னெச்சரிக்கையாக கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
The post திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் appeared first on Dinakaran.