×

காலிஸ்தான் தலைவர் கொலை விவகாரத்தில் இந்தியாவுக்கு பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு

* கனடா போலீசார் திடுக்கிடும் குற்றச்சாட்டு
* இந்திய தூதர்கள் வெளியேற ட்ரூடோ உத்தரவு

வாஷிங்டன்: கனடாவில் காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் தொடர்பிருப்பதாக கனடா போலீசார் திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர். மேலும், கனடா தூதர்களை வெளியேற இந்தியா உத்தரவிட்டதற்கு பதிலாக தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதர்கள் வெளியேற கனடா பிரதமர் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி காலிஸ்தான் உள்ளிட்ட சில பிரிவினைவாத அமைப்புகள் வெளிநாடுகளில் இயங்கி வருகின்றன. இதுபோன்ற காலிஸ்தான் தலைவர்களில் முக்கியமானவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் தொடர்புடைய இவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்திய ஏஜென்ட்கள் மூலம் கொலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இதை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதன் காரணமாக, இந்தியா, கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, நிஜ்ஜார் கொலை வழக்கை விசாரித்து வரும் கனடா காவல் துறையான ராயல் கனேடியன் மவுண்டட் போலீஸ் அமைப்பு (ஆர்சிஎம்பி) நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா உட்பட 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியது. இது தொடர்பாக கனடா அரசு இந்தியாவுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதியது.

இந்த கடிதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்றும், அரசியல் லாபத்திற்காக பிரதமர் ட்ரூடோ அரசு இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் கூறியது. மேலும், கனடாவில் குற்றம்சாட்டப்பட்ட 6 இந்திய தூதர்களை திரும்பப் பெறுவதாகவும், அதே சமயம் இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் வரும் 19ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறவும் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கனடா பிரதமர் ட்ரூடோ செய்தியாளர்களை சந்தித்து இந்தியாவுக்கு எதிராக கடும் கண்டனத்தை பதிவு செய்தார். ஒட்டாவில் அவர் அளித்த பேட்டியில், ‘‘கனடா நாட்டினர் மீது தாக்குதல் நடத்தவும், சொந்த நாட்டில் அவர்களை பாதுகாப்பற்றவர்களாக உணர வைப்பதற்கும், இந்தியா தனது தூதர்களையும், சட்டவிரோத கும்பல்களையும் பயன்படுத்தி மிகப்பெரிய தவறை செய்துவிட்டது. இதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது கனடாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ள முடியாத அத்துமீறல்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கடந்த வாரம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற முயற்சிகள் மேற்கொண்டோம். விசாரணை தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் வழங்கியும் இந்தியா ஒத்துழைக்கவில்லை. இந்திய அரசு எதற்கும் தயாராக இல்லை’’ என்றார். மேலும், கனடா நாட்டு தூதர்களை இந்தியா வெளியேற்றியதற்கு பதிலடியாக இந்திய தூதர்கள் 6 பேரும் கனடா நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் ட்ரூடோ உத்தரவிட்டார்.

இதே போல, கனடா போலீஸ் அதிகாரிகள் நேற்று அளித்த பேட்டியின் போது, கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தை இந்தியா குறிவைக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘தெற்காசிய சமூகம் குறிவைக்கப்படுகிறது. குறிப்பாக காலிஸ்தான் ஆதரவு தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இதில் குற்றப்பின்னணி கொண்ட சட்டவிரோத கும்பல்களுடன் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கிறது. முக்கியமாக, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்’’ என்றனர். இந்திய அரசுக்கு பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பிருப்பதாக கனடா கூறியிருப்பது திடுக்கிட வைத்துள்ளது. பிஷ்னோய் கும்பல் இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளுடன் தொடர்புடையது.

முக்கிய நபர்களை கொலை செய்வது, பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் கடத்தல் போன்ற செயல்களில் பிஷ்னோய் கும்பல் செயல்படுவதாக என்ஐஏ குற்றம்சாட்டி உள்ளது. சமீபத்தில் மும்பையில் தேசியவாத காங்கிரசின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலையிலும் பிஷ்னோய் கும்பல் கைவரிசை இருப்பதாக சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பிஷ்னோய் குஜராத் சிறையில் இருந்தபடி பல்வேறு கொலைகளை நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், அவருக்கும் இந்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக கனடா கூறுவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

* அமெரிக்காவிலும் இதையே செய்தனர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மேலும் கூறுகையில், ‘‘கடந்த கோடை காலத்தின் தொடக்கம் முதலே எங்களின் நட்பு நாடுகளுடன் (ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா) இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். அமெரிக்காவிலும் இந்தியா இதே போன்ற செயல்களை செய்திருப்பதையும் நாங்கள் அறிகிறோம். சட்டத்தின் ஆட்சிக்காக நாங்கள் ஒன்றிணைந்து இருப்பதால் இந்த விஷயத்தில் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்’’ என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து அமெரிக்கா தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை. அமெரிக்காவில் வசிக்கும் பன்னுன் எனும் காலிஸ்தான் ஆதரவு தலைவரை இந்திய ஏஜென்ட்கள் இதே போல சுட்டுக் கொல்ல முயன்றதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி அதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

* மோடியை சந்தித்த 3 நாளில் பூதாகரம்

கடந்த 11ம் தேதி லாவோசில் நடந்த ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றிருந்தார். அப்போது மாநாட்டில் பங்கேற்ற கனடா பிரதமர் ட்ரூடோவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்த அடுத்த 3 நாளில் நிஜ்ஜார் விவகாரம் பூதாகரமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா மறுப்பு

ஆதாரங்களை வழங்கியதாக ட்ரூடோ கூறியது குறித்து இந்திய வெளியுறவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆரம்பத்தில் இருந்தே கனடாவின் அணுகுமுறை இந்தியா மீது குற்றம்சாட்டுவது, பழி போடுவதுமாக உள்ளது. இதில் கனடா தரப்பில் ஆதாரங்கள் பகிரந்து கொள்ளப்பட்டதாக கூறியிருப்பதில் முற்றிலும் உண்மையில்லை. கனடா பிரதமரின் பேட்டியில் புதிதாக எதையும் கூறவில்லை. பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறார். கனடா எந்த ஆதாரத்தையும் இந்தியாவிடம் தரவில்லை’’ என்றனர்.

* இந்தியாவை ஒத்துழைக்க வலியுறுத்துவோம்

தூதர்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியாவுக்கு தடைகள் விதிக்கப்படுமா என கனடா வெளியுறவு அமைச்சர் மெலானி ஜாலியிடம் செய்தியாளர்கள் நேற்று கேட்டதற்கு, ‘‘வியன்னா மாநாட்டு தீர்மானங்களின்படி, தூதர்களை திரும்பப் பெறுவது என்பது தீவிரமான நடவடிக்கையில் ஒன்றாகும். ஆனாலும் நாங்கள் இந்தியாவை ஒத்துழைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்களின் 5 நட்பு நாடுகளுடனும், ஜி7 நாடுகளுடனும் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். இந்தியாவுடன் தூதரக மோதலை அதிகரிக்க விரும்பவில்லை. ஏனெனில் கனடாவில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். எங்கள் இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் மக்களை பகிர்ந்து கொள்வதில் வலுவான உறவு உள்ளது. எனவே நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் ஒத்துழைக்க வேண்டுமென இந்தியாவிடம் வலியுறுத்துவோம்’’ என்றார்.

The post காலிஸ்தான் தலைவர் கொலை விவகாரத்தில் இந்தியாவுக்கு பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு appeared first on Dinakaran.

Tags : Bishnoi gang ,India ,president ,Callistan ,Trudeau ,Washington ,Lawrence Fishnoy ,Nijjar ,Canada ,Palestine ,
× RELATED சல்மான் கான், தாவூத் கும்பலுடன்...