×

பாக்.கில் தீவிரவாதம் இருக்கும் வரை வர்த்தக உறவுக்கு வாய்ப்பே இல்லை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

இஸ்லாமாபாத்: தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்ற எல்லை தாண்டிய செயல்பாடுகளினால் நாடுகளுக்கு இடையே வர்த்தகம், எரிசக்தி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க வாய்ப்பே இல்லை என பாகிஸ்தானில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். இஸ்லாமாபாத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு பாகிஸ்தானில் நேற்று நடந்தது.

மாநாட்டில் அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், பெலாரஸ், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நேற்று மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசும்போது தீவிரவாத விஷயத்தில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். அவர் பேசியதாவது:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் பரஸ்பர நம்பிக்கையுடன் கூட்டாக குழுவாக முன்னோக்கி நகர்ந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஒத்துழைப்பு என்பது பரஸ்பர நம்பிக்கை மற்றும் இறையாண்மை சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இது ஒருதலைப்பட்சமாக இல்லாமல், உண்மையான கூட்டாண்மைகளில் கட்டமைக்கப்பட வேண்டும். தீவிரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) முதன்மையான குறிக்கோள் ஆகும். இதை அடைய நேர்மையான பேச்சுவார்த்தை முக்கியம். இதற்கு நேர்மையான பேச்சுவார்த்தை, நம்பிக்கை, நல்ல அண்டை நாடு மற்றும் அர்ப்பணிப்பு தேவை. இந்த மூன்று தீமைகளையும் எதிர்கொள்வதில் எஸ்சிஓ உறுதியாகவும் சமரசமின்றியும் இருக்க வேண்டும். தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்ற எல்லை தாண்டிய செயல்பாடுகளினால் நாடுகளுக்கு இடையே வர்த்தகம், எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்க வாய்ப்பே இல்லை. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.

The post பாக்.கில் தீவிரவாதம் இருக்கும் வரை வர்த்தக உறவுக்கு வாய்ப்பே இல்லை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு appeared first on Dinakaran.

Tags :
× RELATED கொசுக்களால் பரவும் அரிய வகை நோய்: அமெரிக்காவில் ஒருவர் உயிரிழப்பு!