×

‘பால் பாக்கெட் கூட வாங்க முடியாமல் தவிச்ச தவிப்பு இருக்கே..’’மேம்பாலத்தில் வாகனங்கள் பார்க்கிங் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கினர்

* உஷாரான வேளச்சேரி மக்கள்
* அறைகள் முன்பதிவு முடிந்தது

சென்னை: மழை காலம் வந்தாலே சென்னையில் முதலில் மிதக்கும் பகுதியாக அறியப்படுவது வேளச்சேரியாக இருக்கும். கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையின் போது, ஏராளமான கார்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. மழைநீர் ஒரு வார காலத்துக்கு வடியாததால் வாகனங்கள் பழுதாகின. ஆனால் இந்த முறை அப்படி அல்ல. பெருமழைக்கான அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்ததால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

அதோடு வேளச்சேரி மக்களும் உஷாராக, மழை வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்து விடக்கூடாது என்பதற்காக வேளச்சேரி மேம்பாலத்தில், வரிசையாக தங்களது கார்களை நேற்று முன்தினம் முதலே பார்க்கிங் செய்து வைத்திருந்தனர். அதுமட்டுமல்ல, பல லட்சங்கள் கொடுத்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் தரை தளம் முழுவதும் மழைநீரில் மூழ்கும் நிலை வந்துவிடுகிறது என்பதால், பலர் பணம் வைத்திருந்தாலும் வெளியில் வரமுடியாமல், குழந்தைகளுக்கு பால் பாக்கெட் கூட வாங்க முடியாமல் பல நாட்கள் பரிதவித்த நிலைமை எல்லாம் வேளச்சேரி மக்கள் அனுபவித்த ஒன்று.

அதனால் தற்போது வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், பலர் தங்கள் வானகங்களை மேடான பகுதிகளிலும், மேம்பாலங்கள் உள்ளிட்ட மழைநீர் பாதிக்காத தங்கள் உறவினர் வீடுகளிலும் கொண்டு போய் நிறுத்தி விட்டனர். அதுமட்டுமல்ல, வீட்டில் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளை பாதுகாப்பாக பூட்டி விட்டு, பலர் நேற்று முன்தினம் முதல் மழை விடும் வரை ஓட்டல் அறைகளில் தங்க முடிவு செய்தனர்.

இதற்காக வேளச்சேரியை ஒட்டியுள்ள மழை பாதிப்பு இல்லாத ஓட்டல்களில் கடந்த இரண்டு நாட்களாக அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அந்த அறைகளில் தங்குபவர்கள் தங்களது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களுடன் குடியேறிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேளச்சேரியை சுற்றியுள்ள மழை பாதிப்பு ஏற்படாத ஓட்டல்களில் இன்னும் சில நாட்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிப்புகளை அனுபவித்த பலர் இந்த ஆண்டு உஷாராகி தங்களையும், குடும்பத்தினரையும் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* லிப்ட் மூலம் வீடுகளுக்குள் பைக்குகள் பார்க்

சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்ததும் முதலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது வேளச்சேரி மக்கள் தான். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பலர் தங்கள் வாகனங்களை பாதுகாப்பில் தான் முழு அக்கறையை செலுத்தினர். கடந்த பெருமழையின் போது பலர் தங்கள் கார்கள், பைக்குகளை இழந்து தவித்தனர். இதனால் நான்கு சக்கர வாகனங்களை வேளச்சேரி பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று பாதுகாத்தனர்.

அதேபோன்று இருசக்கர வாகனங்களை லிப்ட் மூலம் தங்களது 2வது, 3வது என அடுத்தடுத்து தங்கள் வீடுகள் கொண்ட தளத்துக்கே கொண்டு சென்றனர். ஒன்றுக்கும் அதிகமான பைக்குகள் வைத்திருப்பவர்கள் லிப்ட் மூலம் எடுத்து சென்று தங்கள் வீடுகளுக்குள் உள்ள மெயின் ஹாலில் விட்டுள்ளனர். இதனால் வேளச்சேரியில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளில் மேல் தளங்களில் உள்ள வீடுகளில் பைக்குகள் அணிவகுத்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

* வடசென்னை மக்களும் சுதாரிப்பு

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கவும் கூறப்பட்டது. இந்நிலையில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம், தங்க சாலை மேம்பாலம், ராயபுரம் மேம்பாலம் ஆகிய மேம்பாலங்களில் அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய கார், ஆட்டோ, வேன், ஆகியவற்றை வரிசையாக நிறுத்தினர். அதிக அளவில் மழை பெய்து வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்ற ஒரு அச்சத்தில் இதுபோல் நிறுத்தி வைத்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனம், ஆட்டோ ஆகியவை தண்ணீர் தேங்கிய பகுதிகளில் சென்று தண்ணீரில் சிக்கிக் கொண்டு கடும் அவதிப்பட்டனர்.

The post ‘பால் பாக்கெட் கூட வாங்க முடியாமல் தவிச்ச தவிப்பு இருக்கே..’’மேம்பாலத்தில் வாகனங்கள் பார்க்கிங் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கினர் appeared first on Dinakaran.

Tags : Usharana Velacheri ,Chennai ,Dinakaran ,
× RELATED மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டண வசூல்...