சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக, கடந்த ஆண்டுகளில், வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், முடிந்த வரையிலும், அடுத்த சில நாட்களுக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நன்று. தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சாலைகளில் செல்லும்போது, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். கனமழை இன்னும் சில நாட்களுக்குத் தொடர வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள், அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மின்சாரம் தொடர்பான பொருள்களைக் கையாளும்போதும், நீர்நிலைகளிலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீர் நிலைகளில் இறங்க முற்படுவதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். பருவமழையைப் பாதிப்பின்றி எதிர்கொள்வோம். இவ்வாறு பதிவில் அவர் கூறியுள்ளார்.
The post பருவமழையை பாதிப்பின்றி எதிர்கொள்வோம்: பாஜ தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் appeared first on Dinakaran.