×
Saravana Stores

மழைக்காலத்தில் மின் விபத்துகள் நேராமல் தடுப்பது எப்படி?

சென்னை: தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை: வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் இஎல்சிபி பொருத்தினால், வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம். ஈரக்கையால் சுவிட்சுகளை இயக்கக் கூடாது. மேலும் குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக் கூடாது. ப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, மோட்டார், இஸ்திரி பெட்டி போன்றவற்றிக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் உள்ள பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிளக் பாயிண்ட்களில் மின்சார வயர்களை பிளக்கு உபயோகிக்காமல் பயன்படுத்தக் கூடாது. உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள், பழுதுபட்ட ஒயர்கள், மற்றும் பழுதான மின் சாதனங்கள் பயன்பாட்டில் இருப்பின், அவற்றை தாமதமின்றி புதுப்பித்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை சுவிட்ச் போடச் சொல்லி விளையாட்டு காட்டுதல் கூடாது. மின் மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அதன் அருகே செல்லக் கூடாது.

மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. மின் கம்பத்திலோ, மின் கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே வயரிலோ, மின் இணைப்பிற்கான சர்வீஸ் பைப் அல்லது சப்போர்ட் பைப்பிலோ கொடிகள் கட்டி துணிகளை காய வைக்கக் கூடாது. மின் கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது.

மின்சார கம்பிகளுக்கு அடியில் கட்டிடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும். டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியில் சிறுநீர் கழிக்கக் கூடாது. வீடுகளில், மின் கம்பங்களில் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயலக் கூடாது. மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post மழைக்காலத்தில் மின் விபத்துகள் நேராமல் தடுப்பது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Electricity Board ,
× RELATED தொடர் மின்தடை ஏற்படும் இடங்களில்...