*நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு
நெல்லை : உயிருடன் இருக்கும் தான் இறந்து விட்டதாக கூறி ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுப்பதாக, மூதாட்டி நெல்லை கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார்.
நெல்லை தச்சநல்லூர் டவுன் ரோட்டை சேர்ந்த பரமசிவன் மனைவி சுப்பம்மாள்(74). பரமசிவன் இறந்து விட்ட நிலையில், மூதாட்டி சுப்பம்மாள் தற்போது தனியாக வசித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி ரேஷன் கடைக்கு சென்று அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இவர் வாங்கியுள்ளார். கடந்த மாதம் ரேஷன் கடைக்கு ெபாருட்கள் வாங்க சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக பதிவுகள் உள்ளதாகவும், எனவே பொருட்களை வழங்க முடியாது என ரேஷன் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கவலை அடைந்த மூதாட்டி நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்திலும், குடிமை பொருள் வழங்கல் அலுவலகத்திலும் தொடர்ந்து சென்று முறையிட்டுள்ளார். நான் உயிரோடு தான் இருக்கிறேன் என பலமுறை கூறியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மூதாட்டி சுப்பம்மாள் நேற்று தனது பேரன் ரமேஷை அழைத்து கொண்டு, நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்தார். நடக்க முடியாமல் திண்டாடிய அவரை பேரன் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க ஏற்பாடு செய்தார். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர்.
The post உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்ததாக கூறி ரேஷன் பொருட்கள் வழங்க மறுப்பு appeared first on Dinakaran.