×

தாம்பரம் மாநகராட்சியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழுக்கள்: ஆணையர் தகவல்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வதை தடுக்க, 5 மண்டலங்களிலும் ரூ.37.59 கோடியில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 785 கிலோ மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால்கள், 62.75 கிலோ மீட்டர் நீளமுள்ள வரத்து கால்வாய்கள் மற்றும் 6930 சிறுபாலங்கள் உள்ளன. இவற்றை ரூ.3.28 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுரங்கப்பாதைகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றும் வகையில் 6 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 80 டீசல் மற்றும் மின் மோட்டார் பம்புகள் மற்றும் 25 டிராக்டர்களில் பொறுத்தப்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான மணல் மூட்டைகள், மீட்பு பணிகளை மேற்கொள்ள 21 பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. கழிவுநீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டார் பம்புகள் பராமரிக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காரணமாக விழும் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்கு 29 மர அறுவை இயந்திரங்கள், இரவு நேரங்களில் விழும் மரங்களை அகற்றிடும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு விழும் நிலையில் உள்ள 1,821 மரக்கிளைகள் கத்தரித்து விடப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தின் போது பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்கக்கூடிய வகையில் மாநகராட்சி பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள், 19 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் வகையில் பொது சமையலறைகள் தயார் நிலையில் உள்ளன. மழைக்கால வியாதிகளுக்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள 13 நடமாடும் மற்றும் நிலையான மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கும் இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 14 மருந்து தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கும் 20 ஸ்ப்ரேயர்கள், 10 கையினால் இயங்கும் புகை பரப்பும் இயந்திரங்கள், 10 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 8 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பூங்காக்கள், சாலை பகுதிகளில் புகை பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசு புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு வளரிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு கொசு மருந்து, கொசுப்புகை மருந்துகள், பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவிற்கு இருப்பு வைத்திருக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளையும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்படும் பாலங்கள், சிறு பாலங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேற ஏதுவாக தேவையற்ற திடக்கழிவுகள், செடி, கொடிகள் போன்றவற்றை அகற்றிடவும், தேவையான எண்ணிக்கையில் நீரிறைக்கும் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியுடன் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்பு துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பிற சேவை துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள கட்டணமில்லா தொலைப்பேசி எண் 1800 425 4355, 1800 425 1600, வாட்ஸ்அப் எண் 84383 53355 மற்றும் தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளப்பாதிப்பு பணிகளை கண்காணிக்கவும் மண்டலங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களது செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல அலுவலகத்திற்கு, செயற்பொறியாளர், ஞானவேல் – 82488 88577, 2வது மண்டல அலுவலகத்திற்கு துணை ஆணையர் நாராயணன் – 94448 20460, 3வது மண்டல அலுவலகத்திற்கு உதவி ஆணையர் சொர்ணலதா – 95008 77977, 4வது மண்டல அலுவலகத்திற்கு உதவி ஆணையர் ஷகிலா 94456 65985, 5வது மண்டல அலுவலகத்திற்கு உதவி ஆணையர் (வருவாய்), செந்தில்குமார் ரத்தினம் – 99408 24564 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தாம்பரம் மாநகராட்சியில் மீட்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழுக்கள்: ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,North-East ,Municipal Commissioner ,Balachander ,Tambaram Municipal Corporation ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் தீவிர தூய்மை பணி: மேயர் தொடங்கி வைத்தார்