×

வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி நடைபாதை அமைத்து தர வலியுறுத்தல்

 

ஈரோடு, அக். 15: வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி நடைபாதை அமைத்து தர வேண்டும் என கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஈரோடு அடுத்துள்ள பெரிய சேமூர், கல்லாங்கரடு பகுதி பொதுமக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று அளித்துள்ள மனு விவரம்: கல்லாங்கரடு, ஸ்ரீராம் நகர் பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

எங்கள் பகுதியில் இருந்து நாங்கள் எல்லப்பாளையம் மற்றும் பெரியசேமூர் பகுதிகளுக்கு செல்ல சுமார் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்வதாக உள்ளது. எங்கள் பகுதியில் உள்ள வண்டிப்பாதை ஒன்று 200 மீட்டர் தொலைவில் எல்லப்பாளையம் சாலையை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த 2 குடும்பத்தினர் ஆக்கிரமித்து உள்ளனர். அதனை மீட்டு எங்களுக்கு பாதை அமைத்து தருமாறு கடந்த மாதம் ஈரோடு வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தோம்.

அதன் அடிப்படையில் கடந்த 3ம் தேதி ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் இயந்திரத்தின் மூலமாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, அந்த வண்டி பாதையை ஆக்கிரமித்து இருந்த 2 குடும்பத்தினரும் தலையிட்டு ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுத்து நிறுத்திவிட்டனர். எனவே, அந்த வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, எங்களுக்கு நடைபாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி நடைபாதை அமைத்து தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Erode ,People's Grievance Day ,Periya Seymour ,Kallangaradu ,Dinakaran ,
× RELATED வெள்ளியணை பெரியகுளம் ஏரியில் சீத்த முட்செடிகளை அகற்ற வேண்டும்