×

தமிழக பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு முதல்கட்ட நிதி ரூ573 கோடி ஒதுக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்


கோவை: தமிழக பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்க ஒப்புக்கொண்ட பிறகும் ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின்படி, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 60-க்கு 40 என்ற அளவீட்டின்படி, ஒன்றிய அரசின் எஸ்.எஸ்.ஏ. நிதி பங்களிப்புடன் நவீனமயமாக்க பணியும் நடந்து வருகிறது. ஆனால், மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்க ஒப்புக்கொண்ட பிறகும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்து வருகிறது. முதல்கட்டமாக ரூ.573 கோடி நிதி வரவேண்டும். இதைக்கூட இன்னும் ஒதுக்கவில்லை.

பள்ளி கல்வித்துறையில், வளர்ந்து வரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு, ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் ஓரவஞ்சணை செய்வது ஏற்புடையது அல்ல. நாங்கள் சொல்கிற கொள்கையை சேர்த்துக்கொண்டால் மட்டுமே நிதி ஒதுக்குவோம் என்று சொல்வது ஆரோக்கியமான செயல் அல்ல. பள்ளி கல்வித்துறை அடுத்த தலைமுறையை உருவாக்கும் துறை. இந்த துறையை மாநில அரசு கைவிடாது. எஸ்.எஸ்.ஏ. நிதிக்கு மிகப்பெரும் தடையை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. ஆனாலும், மேம்பாட்டு பணி தொடர்கிறது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழக பள்ளிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு முதல்கட்ட நிதி ரூ573 கோடி ஒதுக்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu ,Minister ,Anbil Mahesh ,Coimbatore ,Minister Anbil Mahesh Poiyamozhi ,Tamil Nadu School ,Education ,Anbil Mahesh Poiyamozhi ,Minister Anbil Mahesh ,Dinakaran ,
× RELATED முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை...