×

காலிஸ்தான் ஆதரவாளர் கொலை விவகாரம்: கனடாவின் புகாருக்கு பதிலடியாக தூதரை திரும்ப பெறுகிறது இந்தியா: இரு நாட்டு உறவில் மீண்டும் சிக்கல்

புதுடெல்லி: காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதரருக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு மீண்டும் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கான தூதரை இந்தியா திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இது இந்தியா, கனடா இடையேயான உறவை மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் கடந்த ஆண்டு காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார்.

இதை இந்தியா மறுத்தது. அடிப்படை ஆதாரமின்றி ட்ரூடோ குற்றம்சாட்டுவதாக இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தால் இந்தியா, கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதாகவும், கனடாவிடம் உள்ள ஆதாரங்களை பகிர்ந்து கொள்ளுமாறும் இந்தியா தரப்பில் கனடாவிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரையிலும் கனடா அரசு தனது குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதாரத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தங்களின் விசாரணையில் இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கனடா தரப்பில் மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் அறிக்கையில், ‘கனடாவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. கேலிக்குரியவை. அரசியல் லாபத்திற்காக இந்தியாவை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த விவகாரத்தில் இந்திய அரசு ஏற்கனவே வலியுறுத்திய நிலையில் கனடா தரப்பில் இதுவரை சிறிய ஆதாரம் கூட பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கனடா பிரதமர் ட்ரூடோவின் இந்தியா மீதான விரோதத்திற்கு நீண்டகால ஆதாரங்கள் உள்ளன. தூதர் சஞ்சய் குமார் வர்மா 36 ஆண்டுகாலம் சிறப்பான பணியாற்றிய இந்தியாவின் மூத்த தூதர். அவர் ஜப்பான் மற்றும் சூடானில் தூதராகவும், இத்தாலி, துருக்கி, வியட்நாம் மற்றும் சீனாவிலும் பணியாற்றியுள்ளார்’ என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனடா தூதரருக்கு வெளியுறவு அமைச்சகம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. கனடா தூதரை நேரில் வரவழைத்த வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரக அதிகாரிகள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை என விளக்கம் அளித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கனடா அரசால் குற்றம்சாட்டப்பட்ட இந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுவதாக வெளியுறவு அமைச்சகம் அதிரடியாக அறிவித்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கனடா அரசின் உறுதிப்பாட்டில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, இந்திய தூதரம் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட பிற அதிகாரிகளை திரும்பப் பெற இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதம், வன்முறை மற்றும் பிரிவினைவாதத்திற்கு ட்ரூடோ அரசு அளிக்கும் ஆதரவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேலும் நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் இந்தியா, கனடா உறவில் மிகுந்த சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

The post காலிஸ்தான் ஆதரவாளர் கொலை விவகாரம்: கனடாவின் புகாருக்கு பதிலடியாக தூதரை திரும்ப பெறுகிறது இந்தியா: இரு நாட்டு உறவில் மீண்டும் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Khalistan ,India ,Canada ,New Delhi ,Canadian government ,Hardeep Singh Nijjar ,Dinakaran ,
× RELATED இந்தியாவுக்கு எதிராக சீக்கியர்களை...