திருவண்ணாமலை, அக்.15: திருவண்ணாமலை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் பணி தொடர்பாக, சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, திருவண்ணாமலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்திருப்பதாவது:இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.1.2025ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் வரும் 29.10.2024 முதல் 28.11.2024 வரை நடைபெற உள்ளது. அதில், தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு 6, 6ஏ, 6பி, 7 மற்றும் 8 ஆகிய படிவங்கள் பெறப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 6.1.2025 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 9.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும், 23.11.2024 (சனிக்கிழமை), 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். எனவே, இந்த முகாம்களில் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், திருத்தவும், நீக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் சிறப்பு முகாம் 4 நாட்கள் நடக்கிறது திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.