திருத்தணி: திருத்தணியில் வழிப்பறி திருடர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்துச் சென்றதாக பள்ளி மாணவி நாடகம் ஆடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மேல் திருத்தணியைச் சேர்ந்த ஒரு மாணவி, திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். வழக்கம் போல் மாணவியின் தந்தை இரு சக்கர வாகனத்தில் நேற்று காலை மகளை பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அங்குள்ள ஆறுமுக சாமி கோயில் வரை நடந்து சென்ற மாணவி ஹெல்மெட் அணிந்து சென்ற மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியதால், காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்க கம்மலை கழற்றி கொடுத்ததாக பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் வழிப்பறி திருடர்கள் கையில் கத்தியால் கிழித்ததில் காயம் ஏற்பட்டதாக மாணவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக போலீசார் ஆறுமுக சாமி கோயில் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது மாணவி கம்மலை கழற்றி அங்குள்ள முட்புதரில் வீசியது தெரியவந்தது. இதுதொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் ராக்கி குமாரி மாணவியிடம் விசாரணை நடத்தினார்.
அதில் பெற்றோருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் மூத்த மகள். நான் நன்றாக படிக்க வேண்டும் என்று தொடர்ந்து பெற்றோர் தொல்லை கொடுத்து வந்தனர். படிக்கவில்லை என்றால் செத்துப் போ என்று பேசியதால், அவர்களை மிரட்ட நகையை வழிப்பறி திருடர்கள் திருடிச் சென்றதாக நம்ப வைக்க கையில் ஊசியால் கீறிக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்தார். பெற்றோர் படிக்க வற்புறுத்தியதால், நகை வழிப்பறி செய்ததாக பள்ளி மாணவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கத்தியை காட்டி மிரட்டி ஆசாமிகள் நகை பறித்ததாக பள்ளி மாணவி நாடகம்: திருத்தணியில் பரபரப்பு appeared first on Dinakaran.