×
Saravana Stores

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் மூலவைகையில் மீண்டும் நீர்வரத்து: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், மூல வைகை ஆற்றில் மீண்டும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மூல வைகை ஆறு உருவாகிறது. இவற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் மூல வைகையில் நீர்வரத்து ஏற்படும். இந்த தண்ணீர் மூலம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர், பாசன வசதிக்கு பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக மூல வைகை ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்கின்றனர். மூல வைகை ஆற்றில் செல்லும் தண்ணீர் குன்னூர் அருகே, பெரியாற்றில் கலந்து வைகை அணையில் தேங்குகிறது. இந்த ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மூல வைகை ஆற்று தண்ணீர் மூலம் நெல், கரும்பு, வாழை, தென்னை, இலவம் உள்ளிட்ட சாகுபடிகள் அதிகளவில் நடக்கின்றன. கடந்த வாரத்தில் போதிய மழை இல்லாததால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், மூல வைகை ஆற்றில் மீண்டும் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் மூலவைகையில் மீண்டும் நீர்வரத்து: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Moolavaigai ,Varusanadu ,Vaigai river ,Moola Vaigai River ,Western Ghats ,Theni District ,Kadamalai-Mylai ,Dinakaran ,
× RELATED மதுரை முழுவதும் மழைநீர் தேக்கம்...