×

நில மோசடி புகார்; தொழிலதிபர் வீட்டுக்கு ரெய்டுக்கு சென்ற போலீசார் கோர்ட் அனுமதியை கேட்டு கதவை திறக்காத மகள்கள்: விடிய விடிய போலீசார் காத்திருப்பு

திருச்சி: நில மோசடி தொடர்பான புகாரில் சோதனை நடத்துவதற்காக திருச்சி தொழிலதிபர் வீட்டுக்கு சென்ற போலீசாரிடம் கோர்ட் அனுமதி கடிதத்தை காட்டினால் தான் திறப்போம் என்று கூறி அவரது மகள்கள் கதவை உள்பக்கம் பூட்டிக்கொண்டனர். இதனால் சோதனை நடத்த முடியாமல் 50 போலீசார் அந்த வீட்டு முன் விடிய விடிய காத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகர், புறநகரை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, எஸ்.பி வருண்குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் “ஆபரேசன் அகழி” என்ற பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருச்சி அரியமங்கலம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் மோகன் பட்டேல். இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் நிலம் தொடர்பான பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவர் மீது நில மோசடி தொடர்பான மாவட்ட குற்ற பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. அதனடிப்படையில் எஸ்.பி வருண்குமார் அவரது வீட்டில் சோதனை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து எஸ்.ஐ ரெஜி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பெண் போலீசார் அவரது வீட்டிற்கு நேற்று இரவு 8 மணிக்கு சென்று சோதனை நடத்த முயன்றனர்.

அப்போது மோகன் பட்டேல் வீட்டில் இல்லை. அவரது மகள்கள் மட்டுமே இருந்தனர். மேலும் வீட்டை சோதனை நடத்த அவரது மகள்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு போலீசார் எங்களிடம் சோதனை நடத்துவதற்கான எஸ்பியின் கடிதம் உள்ளது என்று கூறினர். ஆனால் அவர்கள் சோதனை நடத்த கோர்ட் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே எங்களது வீட்டை சோதனை நடத்த வேண்டும் என்று கூறி வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டனர். இதையடுத்து அவரது வீட்டு முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் கோர்ட் உத்தரவு வரும் வரை போலீசார் விடிய விடிய காத்திருந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக அவரது நண்பர் ரவி என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தொழிலதிபர் மோகன் பட்டேல் நில மோசடி வழக்கு தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post நில மோசடி புகார்; தொழிலதிபர் வீட்டுக்கு ரெய்டுக்கு சென்ற போலீசார் கோர்ட் அனுமதியை கேட்டு கதவை திறக்காத மகள்கள்: விடிய விடிய போலீசார் காத்திருப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Vidya Vidya ,Dinakaran ,
× RELATED உடமைகளை பத்திரமாக எடுத்து...