×
Saravana Stores

பாடி எனும் திருவலிதாயம்

*தலம்: பாடி எனும் திருவலிதாயம்.

*மூர்த்தி: இறைவன் – சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் வல்லீசர் – திருவலிதாய நாதர்.

*இறைவி: ஜகதாம்பாள் – தாயம்மை.

*தலவிருட்சம்: பாதிரி.

*தீர்த்தம்: பரத்வாஜ தீர்த்தம்.

*பாடல் பாடியோர்: திருஞான சம்பந்தர், அருணகிரிநாதர், வள்ளலார் ஆகியோர்.

*சிறப்புகளில் சில: 1:30 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இத்திருக்கோயிலில் நவக்கிரக சந்நதி உள்ளது. அதற்கு எதிரில் தீர்த்தக் கிணறு உள்ளது. அந்தக் கிணற்று நீர் இளநீரைப் போல மிகவும் இனிமையாக உள்ளது.

*விநாயகர் சந்நதி இருக்க வேண்டிய இடத்தில், சோமாஸ்கந்தர் சந்நதி உள்ளது. அதற்கு அருகில்தான் விநாயகர் சந்நதி உள்ளது.

*அது போலவே, சுப்பிரமணியர் சந்நதியும் இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல், சற்று முன்பாகவே அதாவது கருவறையின் நேர் பின் பக்கத்தில், எதிரில் அமைந்துள்ளது. சந்நதியில் சுப்பிரமணியருக்கு முன்னால் சிவலிங்கத் திருமேனி இங்கு உள்ளது. அருகிலேயே மீனாட்சி – சுந்தரேஸ்வரர் சந்நதியும் உள்ளது.பரத்வாஜ முனிவர் வழிபட்ட சிவலிங்கம் இங்குள்ளது.

*நடராஜருக்குப் பக்கத்தில் அம்பாள் சந்நதி உள்ளது. இரண்டும் தெற்கு நோக்கிய சந்நதிகளாகவே உள்ளன.

*ஒரே இடத்தில் நின்றபடி சுவாமியையும் அம்பாளையும் தரிசிக்கலாம்.

*கருவறையில் சுயம்பு மூலவரான சிவலிங்கத் திருமேனி கம்பீரமாகக் கிழக்கு நோக்கிய சந்நதியில் காட்சி தருகிறது; சதுரபீட ஆவுடையார்.

*அம்பாள் சந்நதியில் தெற்கு நோக்கி நின்றநிலையில் காட்சி தருகிறார். பழைய விக்கிரகம் சற்று பின்னமாகிவிட்டதால், புது விக்கிரகம் வைக்கப்பட்டிருக்கிறது. பழைய விக்கிரகத்தைக் கருவறையிலேயே, ஒரு பக்கமாக வைத்திருக்கிறார்கள்.

*சித்ரா பௌர்ணமியை அனுசரித்துப் பத்து நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது.

*பிரம்மதேவரின் பெண்களான கமலி – வல்லி எனும் இருவரும் இத்தலத்திற்கு வந்து, திருவலிதாய நாதரைப் பூஜைசெய்தார்கள்; அதன் பலனாக விநாயகரைத் திருமணம் செய்துகொண்டார்கள். அதன் காரணமாக, இடையூறுகள் நீங்கித் திருமணம் நடைபெறப் பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது இத்திருத்தலம்.

*சுவாமியும் அம்பாளும் எழுந்த ருளியுள்ள சந்நதிகளின் முன் உள்ள பொதுவான முகப்பு மண்டபத்தின் நடுவே நின்று நிமிர்ந்து பார்த்தால், மேற்கூரையில் நவகோணமான ஒரே கல்லில் தேவ வடிவங்கள் அடங்கிய ஓர் அழகான சிற்பம் தெரியும்.

*மூலவராக எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்திற்கு மேலே தாமரைப்பூ வேலைசெய்த மரப்பலகை ஒன்று உள்ளது.

பெயர்க் காரணம்

பரத்வாஜ மகரிஷி வலியன் எனும் கரிக்குருவி வடிவில் இங்கு பூஜைசெய்து சாபவிமோசனம் பெற்றதால், இத்தலம், `திருவலிதாயம்’ எனப்பெயர் பெற்றது.

அகத்திய சாபம் நீக்கியது

வாதாபி – இல்வலன் எனும் இருவரை விழுங்கிய அகத்தியர், இங்கே திருவலிதாயத்திற்கு வந்து, திருவலிதாய நாதரைப் பூஜைசெய்து சாப விமோசனம் பெற்றார். சாபங்களை நீக்கும் திருத்தலம் இது.

வழிபட்டுப் பேறு பெற்றவர்கள்

வாயு பகவான், யமன், மன்மதன், இந்திரன், அக்கினி பகவான், சூரிய பகவான், சந்திரன், பிரம்மதேவர், அனுமார், சுக்கிரீவன், ராமர், குசலவர் ஆகியோர் பூஜைசெய்து பேறு பெற்ற திருத்தலம் இது.

கல்வெட்டுச் செய்திகள்

பத்தாம் நூற்றாண்டில் தஞ்சையில் இருந்து அரசாண்ட பார்த்திபேந்திரன் கரிகால னான இரண்டாம் ஆதித்தியன் என்ற சோழ மன்னரும்; முதலாவது ராஜராஜனும் இத்திருக்கோயிலுக்குத் திருப்
பணிகள் பலவும் செய்து, சுற்றிலும் பிராகாரம் எழுப்பினார்கள் என இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது. இதற்குப் பிறகு வந்த விக்கிரம சோழன் (1120-1135) என்ற மன்னர், குழந்தைச் செல்வம் வேண்டி இத்திருத்தலத்திற்கு வந்து, வழிபட்டுக் கருவறை விமானங்கள் – மதில் – வாகனங்கள் என ஏற்படுத்தி; உற்சவங்களையும் நிகழ்த்தி வைத்துப் பிள்ளைப் பேற்றை அடைந்தார் என இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

கல்வெட்டுக்கள் கூறும் பலர்

விஜயகண்ட கோபால தேவன் என்ற சிற்றரசர், இத்திருக்கோயிலுக்கு ஏராளமான நன்கொடைகள் வழங்கியிருக்கிறார். விஜயநகர மன்னர்களான விரூபாட்ச தேவ மகாராயர், வீர ஹரிஹர ராயர், தேவராய மகாராயர் ஆகியோர் ஏராளமான கிராமங்களை இத்திருக்கோயிலுக்குத் தானமாக வழங்கி இருக்கிறார்கள் என்பது வரலாற்று உண்மை; கல்வெட்டுச் செய்திகளும்கூட!

பாடல்கள் சில
“கடலின் நஞ்சம் அமுதுண்டு இமையோர்
தொழுதேத்த நடமாடி
அடல் இலங்கை அரையன் வலிசெற்று
அருள் அம்மான் அமர் கோயில்
மடல் இலங்கு கமுகின் பலவின்
மது விம்மும் வலிதாயம்
உடல் இலங்கும் உயிர் உள்ளளவும்
தொழ உள்ளளத் துயர் போமே’’
(திருஞான சம்பந்தர்)
வள்ளலாரும் வலிதாயமும்

ராமலிங்க சுவாமிகள் எனும் வள்ளலார், இங்கே திருவலிதாயத்திற்குத் தரிசனம் செய்ய வந்தார். அப்போது சுவாமியின் சிவலிங்கத் திருமேனியில் பழைய கந்தையைச் சார்த்தி இருந்தார்கள். அதைக் கண்ட வள்ளலார் மனம் வருந்தி ஒன்பது பாடல்கள் பாடினார்; நிறைவாக, ‘‘திருவலிதாயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! உனக்குக் கந்தையைப் போர்த்தி இருப்பதைப் பார்த்தால், கல் நெஞ்சம் கூடக் கரைகின்றதே!’’ என்று பாடி நிறைவு செய்தார்.

‘‘சிவபெருமானே! தரை துடைப்பதற்குக் கூடத் தகுதியில்லாத துணியை, உனக்குச் சார்த்தி இருக்கிறார்களே! இது ஏன்?’’ தரை படாக் கந்தை சாத்தியது என்கொலோ (வள்ளலார்) சிவபெருமானுக்கு இங்கே சார்த்தியிருந்த வஸ்திரம் மிகவும் கிழிந்து போயிருந்ததைக் கண்ட வள்ளலார், ‘‘சிவபெருமானே! நீ இங்கு உடுத்தியிருக்கும் இந்தக் கிழிந்த கந்தையைத் தைத்துக் கொடுப்பவர்கள் இல்லையா?’’ என மனம் உருகிக் கேட்கிறார். துன்னுவார் இலையோ பரஞ்சோதியே (வள்ளலார்)எப்படி செல்வது?: சென்னையில் இருந்து ஆவடி செல்லும் வழியில், ‘லூகாஸ் டி.வி.எஸ். பேருந்து நிலையத்தில் இறங்கி இந்த கோயிலை அடையலாம்.

V.R.சுந்தரி

The post பாடி எனும் திருவலிதாயம் appeared first on Dinakaran.

Tags : Valleiser ,Thirunjana Sampanther ,Arunagrinathar ,Vallalar ,
× RELATED பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகல ஏற்பாடு