×

ஆதி திராவிடர் – பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மதிவேந்தன் பதில்

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் அனைத்து நிலைகளிலும் உயர்வடைய செய்வதற்கான பல்வேறு நலத்திட்டங்களை அரசு சிறப்பாக செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மதிவேந்தன் பதிலளித்துள்ளார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் நலத்திட்டங்களை செயல்படுத்தாமலும், நடைபெறும் முறைகேடுகளை தடுக்காமலும் வேடிக்கை பார்க்கும் திமுக அரசுக்கு கண்டனம் எனும் தலைப்பில் அதிமுக பொது செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை தொடர்பாக அமைச்சர் மதிவேந்தன் பதில் அறிக்கை விடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

அதிமுக ஆட்சி காலத்தில் தாட்கோ மூலம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் பல்வேறு இதர நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடங்கி இருந்தது மேலும், தாட்கோ மூலம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க, மானியத்துடன் கூடிய கடன் வழங்க பெறபட்ட 3,963 விண்ணப்பங்கள் இருப்பில் வைக்கப்பட்டு, இந்த மானியத்திற்கான தொகை ரூ.52 கோடி விடுவிக்கப்படாமல் வங்கிகளில் நிலுவையில் இருந்தது இந்நிலையை உடனடியாக சரிசெய்வதற்கு மாவட்ட அளவில் மேலாளர்கள், உதவி மேலாளர்கள், திட்ட மேலாளர் போன்ற பணியிடங்கள் நிரப்புவது மிகவும் அவசியமாகும். அதன்படி, தாட்கோவில் பெரும்பாலான மேலாளர் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.

நிர்வாக நலன் கருதி தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மற்றும் கடனுதவி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலனை செய்து வங்கிகளில் உள்ள நிதியினை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக 11 மாவட்ட மேலாளர்கள், 6 உதவி மேலாளர்கள் போன்ற பணியிடங்கள் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பியதின் மூலம் கடந்த ஆட்சி காலத்தில் வங்கியில் இருந்து விடுக்கப்படாத மானியத்தொகையுடன் இன்றைய தேதிவரை உள்ள ரூ.100 கோடிக்கான மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வருடத்திற்கான கடனுதவி விண்ணப்பங்களும் பெறப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தாட்கோ தொழில்நுட்ப பிரிவில் 2 செயற்பொறியாளர் பணியிடம், 18 உதவி செயற்பொறியாளர் பணியிடம் மற்றும் 80 உதவி பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றினை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் அப்பணியிடங்கள் விரைவில் நிரப்பட்ட உள்ளன. தாட்கோ மூலம் ரூ.600 கோடி மதிப்பீட்டிலான பணிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன.

இதுமட்டுமல்லாது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ‘அமுத சுரபி’ எனும் திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டு, முன்னோடித் திட்டமாக சென்னை மாநகரில் உள்ள விடுதிகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல், பழங்குடியினர் மேம்பாட்டு வசதிக்காக தொல்குடி என்ற திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கான அரசு ஆணைகள் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பது முற்றிலும் தவறான செய்தியாகும். சமூக நீதி அடிப்படையிலான சமத்துவ சமுதாயத்தினை உருவாக்க உறுதி பூண்டுள்ள தமிழ்நாடு முதல்வரின் ஆற்றல் மிக்க தலைமையின் கீழ் இயங்கி வரும் இந்த அரசு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை அனைத்து நிலைகளிலும் உயர்வடையச் செய்வதற்கான பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்பதை நான் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஆதி திராவிடர் – பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மதிவேந்தன் பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Mathivandan ,Edapadi Palanisami ,Chennai ,Mathivanthan ,Adi Dravidar ,Adi ,
× RELATED தமிழ்நாடு அலங்கார ஊர்தி தொடர்பாக...