×
Saravana Stores

உலக முட்டை தினம்: முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்தா? மருத்துவர் விளக்கம்

பெரம்பூர்: ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்றை உற்றுநோக்கினால் அந்த உணவுப் பொருள் எங்கு தோன்றியது, எவ்வாறு மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது, அதன் வளர்ச்சி என்ன, தற்போது வரை அந்த உணவுப் பொருள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளதா, இன்றளவும் மக்கள் அதை விரும்பி சாப்பிடுகிறார்களா என்ற பல கேள்விகளுக்கு நாம் விடை கிடைக்க நேரிடும். ஒவ்வொரு உணவுப் பொருளும் ஒவ்வொரு நாட்டில் பிரசித்தி பெற்றிருக்கும். சில நாடுகளில் மட்டுமே குறிப்பிட்ட அந்த உணவுப் பொருளை விரும்பி சாப்பிடுவார்கள், மற்ற நாடுகளில் அந்த உணவுப்பொருள் சுற்றுலாவுக்கு வருபவர்கள் சாப்பிடும் உணவுப் பொருளாகவும், அல்லது மிகவும் குறைவான அளவில் சாப்பிடும் உணவுப் பொருளாகவும் இருக்கும். உதாரணத்திற்கு பீட்சா போன்ற உணவுப் பொருட்கள் உலகளவில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று பல அரபு நாடுகளில் ஒட்டக கறி மிகவும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும் ஒட்டக கறிக்கு வரவேற்பு இருக்கிறதா என்று பார்த்தால் கண்டிப்பாக கிடையாது. இவ்வாறு ஒவ்வொரு உணவுப் பொருட்களும் குறிப்பிட்ட சில இடங்களில் வரவேற்பையும், மற்ற இடங்களில் குறைவான வரவேற்பையும், சில நாடுகளில் அறவே அந்த உணவை பயன்படுத்துவது இல்லை.

அதேபோல், சில தென்னிந்திய உணவு வகைகள், வெளி நாடுகளில் கிடைப்பதில்லை. ஆனால் ஓரிரு நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு உணவுப் பொருளாக முட்டை உள்ளது. முட்டையின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டி உள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பாக கி.மு.3200களில் எகிப்தியர் முட்டையை உணவாக உட்கொண்டு இருக்கிறார்கள். ஐரோப்பியர் கி.மு.600ல் இருந்து முட்டையை உபயோகித்து இருக்கிறார்கள் என வரலாறு கூறுகிறது. தொழில் ரீதியாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் சென்றவர்கள் இதனை உணவுப் பொருளாக கொண்டுசென்று மற்ற நாடுகளுக்கும் கொடுத்து ஆரம்ப காலகட்டத்தில் பண்டமாற்று முறை போன்ற பல்வேறு முறைகளில் சிக்கி அதன் பிறகு அவரவர்களே இந்த முட்டையின் மகத்துவத்தை அறிந்து வீட்டில் கோழிகளை வளர்த்து முட்டையை உணவுப் பொருளாக மாற்றினர். முட்டையில் 13 விதமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த புரத சத்து உள்ளிட்டவை உள்ளன.

வேக வைத்த முட்டையில் சுமார் 21 கலோரிகள் மற்றும் வைட்டமின் ஏ, பி 5, பி12, பி6 டி மற்றும் பாஸ்பரஸ், செலினியம், கால்சியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் 6 கிராம் புரதம் மற்றும் 5 கிராம் கொழுப்பு உள்ளது. எப்போதுமே எவ்வளவு நல்ல உணவு வகையாக இருந்தாலும் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும், எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து மக்களுக்கு ஒரு போதிய விழிப்புணர்வு இருக்காது. அதனை தெளிவுபடுத்தும் விதத்தில் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளையும் நாம் கேட்க வேண்டும். இதுகுறித்து வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் தீபிகன் கூறுகையில், ‘‘முட்டை என்ற உணவுப் பொருள் உடலுக்கு நல்லது என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை எவ்வாறு சாப்பிட வேண்டும் என்ற ஒரு வரைமுறை உள்ளது.

அதை உரிய முறையில் பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டால் அவர்களது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் அது நன்மை பயக்குவதாக இருக்கும். குறிப்பாக முட்டை என்ற ஒரு உணவுப்பொருளை சாப்பிடும்போது பொதுவாக மனிதர்களுக்குள் பல கேள்விகள் எழுகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் முட்டை சாப்பிடலாமா, முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு கெடுதலா, பச்சை முட்டையை குடிக்கலாமா, பாய்லர் கோழி முட்டை சத்தானதா, நாட்டுக்கோழி முட்டை சத்தானதா, ஒரு நாளைக்கு எத்தனை முட்டை உண்ணலாம், குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து முட்டையை கொடுக்க ஆரம்பிக்கலாம், ஆம்லெட் நல்லதா, அவித்த முட்டை நல்லதா, ஆப்பாயில் சாப்பிடலாமா, மஞ்சள் கருவோடு சேர்த்து சாப்பிடலாமா என பல கேள்விகள் முட்டை விஷயத்தில் பொதுமக்களுக்கு எழுகிறது. ஆனால் அந்த கேள்விகளை நன்றாக கேட்டு தெரிந்து அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டால் அது மக்களுக்கு நன்மை பயக்கும். அந்த வகையில் குறைந்த விலையில் அதிக சத்துள்ள உணவு பொருள் என்றால் அது உலகத்திலேயே முட்டையை தவிர வேறு ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை.

முட்டையை பொறுத்தவரை முழு முட்டையை சாப்பிடுவதுதான் நல்லது. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருப்பதாக கருதப்படுகிறது. இது பாஸ்போலிப்பிட்களின் நல்ல மூலமாகவும் அதாவது மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பு வகையை சேர்ந்ததாகும். நமது உடல் நலத்தை பொறுத்து நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். இதனால் உடலுக்கு புரதம் மற்றும் வைட்டமின்களும் கிடைக்கின்றன. இதன் காரணமாக நீண்ட நேரம் பசியை உணர மாட்டீர்கள். உடல் எடையை டயட் மூலம் குறைப்பவர்களுக்கு முட்டை வெள்ளைக்கரு பெரிதும் உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் ஒரு முட்டையை சாப்பிடலாம். ஒரு முட்டையில் சராசரியாக 70 முதல் 80 கலோரிகள், 6 கிராம் புரதம், 5 கிராம் கொழுப்பு இருக்கும் என கூறப்படுகிறது. உண்மையில் பிராய்லர் கோழி முட்டைக்கும், நாட்டுக்கோழி முட்டைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது. இரண்டிலும் சத்துக்கள் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இது மட்டுமின்றி இரண்டு வகை முட்டைகளிலும் பாஸ்பரஸ், அயோடின், செலினியம், இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது. இவை அனைத்தும் உடலுக்கு நல்லது.

முட்டையை ஆம்லெட்டாகவோ, பொரியலாகவோ, வேக வைத்தோ சாப்பிடலாம். ஆனால் முட்டையை பச்சையாகவோ, அரை வேக்காடாகவோ, வேகாத மஞ்சள் கருவாகவோ உட்கொள்ளக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் அதில் உள்ள பாக்டீரியா நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. ஆப்பாயில், கலக்கி எனப்படும் அரைவேக்காடு முட்டைகளை சாப்பிடக்கூடாது. முட்டையை சாப்பிடும் நேரம் மிகவும் முக்கியமானது காலை நேரத்தில் முட்டை உட்கொள்வது சிறந்தது. சமைத்து வெகு நேரமாக முட்டையை சாப்பிடாமல் வைக்கக்கூடாது. முடிந்தவரை உடனே சாப்பிட வேண்டும். இரவில் நாம் சாப்பிட்ட பிறகு நம்முடைய உழைப்பு மிகவும் குறைவாக இருக்கும். எனவே இரவில் முட்டை சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இதய நோயாளிகளுக்கு முட்டை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகி அதன் காரணமாக இதய பாதிப்புகள் ஏற்படலாம் என்று சிலர் கூறுவார்கள். ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். எச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்பின் அளவைத்தான் முட்டை மேம்படுத்தும் என்பதால் பயப்படத் தேவையில்லை. இதேபோன்று சர்க்கரை நோயாளிகளும் கொலஸ்ட்ரால் அளவு சரியாக உள்ளது என்றால் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் கூட எடுத்துக் கொள்ளலாம். அதில் எந்த வித தவறும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post உலக முட்டை தினம்: முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்தா? மருத்துவர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : World Egg Day ,Perampur ,Dinakaran ,
× RELATED வேதியியல் படிக்கும் மாணவரின்...