- சிவகங்கை குளம்
- தஞ்சாவூர் பெருமாள் கோயில்
- தஞ்சாவூர்
- சிவகங்கை பூங்கா
- தஞ்சாவூர் பெரியகோல்
- சிவகாங்கை குளம்
- புதிய நதி
- தின மலர்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயில் அருகே சிவகங்கை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சிவகங்கை குளம் 6.5 ஏக்கரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் வளாகத்தில் தேங்கும் மழைநீர் இன்றளவும் சேமித்து வைக்கப்படும் இடமாக இருப்பதுதான் சிவகங்கை குளம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மழை நீரை சேமிக்கும் விதத்தில் தொலைநோக்கு பார்வையுடன் இதை செயல்படுத்தி காட்டி பாசனத்துக்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படும்படி செய்தவர்தான் மாமன்னன் ராஜராஜசோழன். பரந்து விரிந்து தஞ்சையின் பிரமாண்ட அடையாளமாக விளங்கும் பெரிய கோயில் அருகே சிவகங்கை என்கிற குளத்தை வெட்டி, கோயிலில் இருந்து அந்தக் குளத்துக்கு மழைநீர் செல்லும் வகையில் சாலவம் (நீர்ப் போக்கும் வழி) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார் மாமன்னன் ராஜராஜசோழன். இந்த சாலவத்தை மராட்டிய வம்சத்தின் சரபோஜி மன்னரும் கையாண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜராஜ சோழன் தனது ஆளுகைக்கு உட்பட்ட நிலங்களை வளப்படுத்த வேண்டும் என்பதற்காகவே குளங்கள், ஏரிகளை வெட்டினார். குளங்கள் வெட்டினால் மட்டும் போதுமா. தண்ணீர் அங்குதான் மாமன்னன் ராஜராஜ சோழனின் தொலைநோக்கு பார்வையும், தொழில்நுட்புமும், சிறந்த மதியூகமும் வெளிப்பட்டுள்ளது. பெரிய கோயிலில் மழையின்போது கிடைக்கும் தண்ணீரை வீணாக்காமல் சேமித்துப் பயன்படுத்தும் விதமாக கோயிலின் வடக்கு புறத்தில் நீர் போக்கும் வழி என்று அழைக்கப்படும் சாலவம் என்ற வடிகால் போன்ற அமைப்பை கருங்கற்களைக் கொண்டு அமைத்தார். முதலில் பெய்யும் மழைநீர் அழுக்காக இருக்கும் என்பதால் அந்த நீர் நந்தவனத்துக்குச் செல்லும் விதமாக ஒருசாலவமும், சிறிதுநேரம் கழித்துக் கிடைக்கும் சற்று தெளிவான நீரை குளத்திற்கு கொண்டு செல்ல இரண்டாவது சாலவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கைகுளம் நிரம்பினால் அந்த தண்ணீரும் வீணாகாமல் அங்கிருந்து அய்யன்குளம், சாமந்தான் குளங்களுக்கும் செல்லும் விதமாக நீர்வழிப்பாதைகள் அமைத்து மழைநீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
மேற்படிகுளத்தில் சில ஆண்டுகளாக முழுமையாக தண்ணீர் இல்லாமல் இருந்து வந்தது. சிவகங்கை குளத்திற்கு தண்ணீர் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் ஆணையாளர் கண்ணன் ஆகியோரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.அதனடிப்படையில் சிவகங்கை குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்பட்டு மழைநீர் மற்றும் கல்லணைகால்வாய் உபரிநீர் மூலம் குளம் தற்போது நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் குளத்தை சுற்றி இருந்த முள் செடிகள் அகற்றம் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. பிரமாண்டமான இந்த குளம் முழுமையாக நிரப்பப்பட்டால் நிலத்தடி நீரும் உயரும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
The post தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சிவகங்கை குளத்திற்கு புது ஆற்றில் இருந்து தண்ணீர் நிரப்பும் பணி appeared first on Dinakaran.