கோவை: துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோழிக்கோட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்ட ப்ளை துபாய் நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் 164 பயணிகள் பயணித்தனர். அந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க விமானம் தயாரானது. அப்போது ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அரைமணி நேரமாக அந்த விமானம் வானிலேயே வட்டமிட்டது.
வானிலை சீராகாமல் இருந்ததால் பாதுகாப்பு கருதி கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்ட இந்நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் விமானம் தரையிறங்கியது. திடீரென கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
வானிலை சீரான பின்னர் மீண்டும் விமானம் கோழிக்கோடு விமான நிலையம் புறப்பட்டு செல்லும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று திருச்சியிலிருந்து, ஷார்ஜா சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 2 மணி நேரம் வானில் வட்டமிட்ட பின்னர் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post துபாய் – கோழிக்கோடு சென்ற விமானம் கோவையில் அவசரமாக தரையிறக்கம்! appeared first on Dinakaran.