×

சிகாகோவில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்; மணப்பாறையில் ரூ.2,000 கோடியில் அமெரிக்க மின்னணு உற்பத்தி மையம்: 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய நகரங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, திருச்சி மாநகரில் எண்ணற்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், டைடல் பூங்கா, ஒலிம்பிக் அகாடமி, ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அமெரிக்காவின் ‘ஜாபில்’ நிறுவனம் மணப்பாறையில் அமைய உள்ளது. இந்நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் தொழில் உற்பத்தி சேவைகள் மற்றும் தீர்வுகளை வழங்குபவர்களில் முன்னணி நிறுவனம். இந்த நிறுவனம் சீனா, இந்தியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உற்பத்தி நிறுவனங்களை கொண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் சிகாகோவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜாபில் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.2000 கோடி முதலீட்டில் 10,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது திருச்சி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

துகுறித்து சிப்காட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் ‘ஜாபில்’ நிறுவனம் மின்னணு உற்பத்தி மையம் அமைய உள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் அரசிடமிருந்து வரவில்லை. இந்த சிப்காட்டில் 1097.36 ஏக்கர் நிலம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பிரிவு 1ல் – 466.10 ஏக்கர் நிலமும், பகுதி -2ல் 443.40 ஏக்கர் நிலமும், பகுதி -3ல் 187.86 ஏக்கர் நிலமும் பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி -1ல் 137.9 ஏக்கர் நிலம் உணவுபொருள் தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 35.78 ஏக்கரில் 5 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பகுதி -1ல் மீதம் உள்ள 328.16 ஏக்கர், பொதுவான நிறுவனங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 20.32 ஏக்கர் நிலத்தை 7 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பகுதி -2ல் மொத்தம் உள்ள 443.40 ஏக்கர் நிலத்தில் 194.03 ஏக்கர் நிலத்தை 3 பெரிய நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் 131.01 ஏக்கர் நிலம் சிப்காட் இன்ஜினியரிங் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பகுதி -3ல் உள்ள 187.86 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஜாபில், மணப்பாறை சிப்காட்டில் அமைப்பதற்கான இடம் பார்க்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு 70 முதல் 100 ஏக்கர் வரை இடம் தேவைப்படும் என அவர்கள் தெரிவித்தனர். தமிழக தொழில் துறை அமைச்சர், ஜாபில் நிறுவனம் குறித்த விரிவான அறிக்கையை வழங்கிய பிறகு தான் இடம் பற்றி உறுதியாக தெரியவரும். இந்த நிறுவனத்தின் மூலம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’’ என்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள சிப்காட் தொழிற்துறை பூங்காவிற்கு ஜாபில் நிறுவனம் வந்தால் முதல் பன்னாட்டு மற்றும் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமாக இது இருக்கும். இதன் மூலம் திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும்.

 

The post சிகாகோவில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்; மணப்பாறையில் ரூ.2,000 கோடியில் அமெரிக்க மின்னணு உற்பத்தி மையம்: 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chicago ,US ,Manaparai ,DMK government ,Chennai ,Trichy ,Panjapur Integrated Bus Station ,Tidal ,Park ,Olympic Academy ,American Electronics Manufacturing Center ,Dinakaran ,
× RELATED சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள்,...