×

சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ₹163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் உள்பட சுமார் 8 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு, சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு ₹500 வழங்கப்பட்டது. இதேபோன்று இந்த ஆண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடி தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-24ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க ரூ.163 கோடியே 81 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி,
1) ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவை சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
2) தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-24ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள் ஆகியோருக்கு ₹1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
3) ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவை சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ₹500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு மூலம் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுமார் 8 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
சங்கங்கள் வரவேற்பு: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பணியாளர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.

தொழில்நுட்பக் கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி.பணியாளர் நலச் சங்கம் பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் டி.மணிமொழி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பல முன்னோடி நலத்திட்டங்களை கடைகோடி தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-24ம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியமாக ₹3000, தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-24ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியமாக ரூ.1000, ‘சி’மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கப்படும் எனும் கரும்பினும் இனிய ஆணையிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு சங்கம் தமது நெஞ்சார்ந்த பாராட்டுதலையும், நன்றியினையும் தெரிவித்து கொள்கிறது.

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்க தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய தலைவர் கே.கணேசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசில் பணியாற்றக்கூடிய அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்களுக்கு (சி மற்றும் டி பிரிவு) பொங்கல் பரிசை உரிய நேரத்தில் முன்கூட்டியே வழங்க ஆணை பிறப்பித்த தமிழ்நாடு முதல்வருக்கு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தை சார்ந்த 2.44 லட்சம் பணியாளர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu government ,Chief Minister.… ,Chief Minister MK Stalin ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் விருதுகள் பெற்ற...