*பெண்கள் முற்றுகையால் அதிகாரிகள் நடவடிக்கை
கும்பகோணம் : கும்பகோணம் அருகே தாராசுரத்தில் புதியதாக திறந்த டாஸ்மாக் மதுபான கடையை முற்றுகையிட்ட பெண்கள். நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பின்பு கடை இழுத்து மூடப்பட்டது.கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் அருகே மல்லுக செட்டித்தெரு உள்ளது. இந்த பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் ஏற்கனவே இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி அதே பகுதியில் 3 வதாக மற்றொரு மதுபான கடை திறக்கப்பட்டது.
இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.மல்லுக செட்டித்தெருவில் மூன்றாவதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் திரளான பெண்கள் அந்த மதுபான கடையை முற்றுகையிட்டு அமர்ந்து உடனடியாக அகற்ற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற தாசில்தார் சண்முகம் உரிய அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து, அதுவரை இந்த மதுபான கடை திறக்கப்படாது என உறுதியளித்தார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர் அடுத்த சில தினங்களில் இரண்டாவது முறையாக மீண்டும் இந்த மதுபானகடையை திறக்க முயன்ற போதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த மூன்றாவது மதுபானகடையை பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திடீரென நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நண்பகலில் திறந்து விற்பனையை தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மதுபான கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அந்த மதுபானக்கடையை முற்றுகையிட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது இன்ஸ்பெக்டர்கள் சிவசெந்தில்குமார் மற்றும் ரேகாராணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கும்பகோணம் தாசில்தார் சண்முகம் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொதுமக்களின் நலன்கருதி இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதாக உறுதியளித்தார். இதனால் சமரசமடைந்த அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர். மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் மதுபானகடையில் உள்ள விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை விரைவாக அப்புறப்படுத்துவதாக உறுதி அளித்துள்ளனர்.
The post கும்பகோணம் அருகே தாராசுரத்தில் புதியதாக திறந்த டாஸ்மாக் கடை இழுத்து மூடல் appeared first on Dinakaran.