×

கோபி அருகே விநாயகர் சிலையை அகற்ற கூறியதால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணி நிர்வாகி

*போலீசார் குவிப்பு; பதட்டம்

கோபி : கோபி அருகே உள்ள நம்பியூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்ற கூறியதால், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூர் முல்லை நகர் குடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் இந்து முன்னணி அமைப்பினர் கடந்த மாதம் விநாயகர் சதுர்த்தியையொட்டி தற்காலிகமாக விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்தபிறகு அதே இடத்தில் விநாயகர் கோயில் அமைக்க ஒரு பிரிவினர் நடவடிக்கை எடுத்தனர். சிலை வைப்பதற்கான பீடம் கட்டுமான பணியும் நடைபெற்றது.

இதற்கு அந்த பகுதியில் உள்ள ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், உரிய அனுமதி பெற்று சிலை வைக்க வருவாய்த்துறையினர் கூறி இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திடீரென அங்கு கட்டப்பட்ட பீடத்தில் விநாயகர் சிலையை ஒரு பிரிவினர் வைத்து சென்றனர். நேற்று காலை சிலை வைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இது குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவியது. 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து ஊராட்சி மன்றம் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று சிலை வைக்க போலீசார் கூறவே, தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி அமைப்பினர் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு மேலும் அதிகமானது. இதற்கிடையே சிலை வைக்கப்பட்ட இடத்தில் இரும்பு கதவு வைத்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் வழிபாடு நடத்த தடை விதித்தனர். நம்பியூர் தாசில்தார் ஜாகீர் இரு தரப்பினரையும் தாலுகா அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த நிலையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் செந்தில்குமார் தலைமையிலான ஒரு பிரிவினர் பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்தனர்.

அதைத்தொடர்ந்து தாசில்தார் ஜாகீர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது, இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக உள்ள அரசூர் குள்ளம்பாளையத்தை சேர்ந்த சம்பத்குமார் (35) என்பவர் வழிபாடு நடத்த அனுமதிக்க வலியுறுத்தி திடீரென மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீப்பற்ற வைக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சிலைக்கு போடப்பட்டு இருந்த இரும்பு கதவு அகற்றப்பட்டு விநாயகர் சிலை முன்பு வழிபாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 10 நாட்களுக்குள் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்ற பின்பே வழிபாடு நடத்த வேண்டும் என தாசில்தார் கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

The post கோபி அருகே விநாயகர் சிலையை அகற்ற கூறியதால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இந்து முன்னணி நிர்வாகி appeared first on Dinakaran.

Tags : Hindu Front ,Ganesha ,Gobi ,Hindu Front district ,Nambyur ,Erode district ,Dinakaran ,
× RELATED இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்