சென்னை: கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், முறையாக அனைத்து பரிசோதனைகளையும் முறையாக செய்து கொள்ள வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் காய்ச்சலை தீவிரமாக கண்காணிக்க உரிய நடவடிக்ைககள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கர்பிணிகள் காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வந்தால் டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளும் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
காய்ச்சலுடன் இருமல் இருந்தால் கொரோனா, இன்ஃபுளுவென்சா நோய், பருவக்கால நோய் உள்ளிட்டவை இருக்கிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். முன்னதாக அவர்களுடைய இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாச அளவு உள்ளிட்டவற்றை பரிசோதிக்க வேண்டும். வேறு ஏதாவது நோய்க்கான அறிகுறி இருக்கிறதா, உடலில் நீர் அளவு சரியாக உள்ளதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். மேலும் சிகிச்சை அளித்த பிறகு 48 மணி நேரம் வரை தொடர் கண்காணிப்பில் இருக்கச் செய்ய வேண்டும். அடிக்கடி கை கழுவவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் காய்ச்சலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது, முறையான மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 5 சதவீதம் பேரின் கர்ப்பகால இறப்பு காய்ச்சல் மற்றும் தொற்று நோயால் ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post கர்ப்ப கால பெண்கள் காய்ச்சலை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.