சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர், நிறுவனம், அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், தொழிலாளர்கள் அதனை முற்றிலுமாக மறுத்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறி, காவல்துறையினர் சாம்சங் தொழிலாளர்கள் இருக்கிறார்களா என்று சோதனையிட்டதாகவும், நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்திருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க வேண்டும். இதுபோன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதுடன், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, உரிய பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சுமூகமாக தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு எடப்பாடி கோரிக்கை appeared first on Dinakaran.