சென்னை: தொழிலாளர்களின் உரிமைகளையும், நலனையும் பாதுகாக்க வேண்டும். அதே நேரம் தொழிற்சாலைகளும் மனநிம்மதியுடன் தொழிலை நடத்தும் உகந்த சூழலை உருவாக்கும் கடமையும் பொறுப்பும் இந்த அரசிற்கு உள்ளது. அதனால், சிஐடியு அமைப்பு சாம்சங் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சாம்சங் தொழிற்சாலை விவகாரத்தில் முதல்வர் தனிப்பட்ட முறையில் கூடுதல் கவனம் செலுத்தி, 3 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தையின் பயனாக தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க சாம்சங் நிறுவனம் முன்வந்துள்ளது.
பேச்சுவார்த்தைகளின்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், மிக முக்கியமான கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வந்த தொழிலாளர்களோடு பேசி அதற்கான ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளது.
ஸ்ரீபெரும்தூர் சாம்சங் ஆலையில் சிஐடியு அமைப்பை பதிவு செய்ய வேண்டும் என்று தற்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த முடிவின் அடிப்படையில்தான் தொழிலாளர் நலத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். நீதிமன்ற தீர்ப்பை தொழிலாளர் நலத்துறை நிச்சயம் நிறைவேற்றும். தொழிற்சாலையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்கள் குடும்பங்களின் நலன், தமிழ்நாட்டில் வேலை இல்லாமல் இருக்கும் படித்த இளைஞர்களின் எதிர்கால நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிஐடியு அமைப்பு இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் பின்வருமாறு: கேள்வி: வீடு புகுந்து தொழிலாளர்களை கைது செய்வதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனரே? பதில்: வீடு புகுந்து யாரையும் கைது செய்யவில்லை. ஒரு விபத்து நடக்கின்றது. அந்த விபத்து நடந்த இடத்திற்கு அவர்களை காப்பாற்ற பலரும் செல்கிறார்கள். அப்போது சென்ற காவல்துறையோடு சிறு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதில் ஈடுபட்டவர்களை மட்டுமே கைது செய்து, உடனடியாக அவர்கள் பிணையிலும் வெளிவந்துள்ளார்கள். அரசாங்கம் யாரையும் கைது செய்யவும் இல்லை, அரசாங்கத்திற்கு அது நோக்கமும் இல்லை.
கேள்வி: போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை ஒடுக்க நினைக்கிறதே? பதில்: தற்பொழுதும் சுங்குவார்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திகொண்டு தான் இருக்கிறார்கள். காவல்துறை யாரையும் ரிமாண்ட் செய்யவில்லை. அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தும்போது அனைத்து நபர்களுக்கும் ஒரு மாவட்ட நிர்வாகம் என்ன செய்யுமோ அதை தான் தற்போதும் செய்துள்ளார்கள். எந்த வகையான அடக்குமுறைகளையும் இந்த அரசு எப்போதும் செய்யாது.
கேள்வி: வேறு மாநிலத்திற்கு சாம்சங் நிறுவனம் போவதாக செய்திகள் வெளியாகவுள்ளனவே? பதில்: தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு உகந்த சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் மேலும் ஏறத்தாழ ரூ.38 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகள் வருகிறது. முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. முதல்வர் இந்த விவகாரத்தை அரசியலாக பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வர வேண்டும், தமிழ்நாட்டை நோக்கி பல நிறுவனம் வரும்போது அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தான் சிந்திக்கிறார். இந்த அரசு, தொழிலாளர்களின் உரிமைகளையும் நலனையும் பாதுகாக்கும் அரசாக தான் இருக்கின்றது. அதே வேளையில் தொழிற்சாலைகளும் மனநிம்மதியுடன் தொழிலை நடத்தும் உகந்த சூழலை உருவாக்கும் கடமையும் பொறுப்பும் இந்த அரசிற்கு உள்ளது.
கேள்வி: சிஐடியு சங்கத்திற்கு மட்டும்தான் இந்த எதிர்ப்பா? பதில்: அந்த பகுதியில் பல நிறுவனங்களில் சங்கத்தை பதிவு செய்திருக்கிறோம். தொழிலாளர் நலத்துறை ஒன்றும் தொழிற்சங்கங்களை பதிவு செய்வதற்கு எதிராக இல்லை. இந்த நிறுவனத்தில் சிஐடியு கொடுக்கும் போது அதற்கு ஆட்சேபனை என்பது நிறுவனத்திடம் இருந்து வருகிறது. அந்த ஆட்சேபனை குறித்து விசாரிக்கும் பொறுப்பும் தொழிலாளர் நலத்துறைக்கு தான் உள்ளது. சிஐடியு சார்ந்து இயங்கும் பல சங்கங்களுக்கும் அந்த பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களிலும் ஏற்கனவே பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதில் அரசு தெளிவாக இருக்கிறது.
The post நீதிமன்ற தீர்ப்பை தொழிலாளர் நலத்துறை நிறைவேற்றும் சாம்சங் போராட்டத்தை கைவிட வேண்டும்: சிஐடியு-வுக்கு அரசு கோரிக்கை appeared first on Dinakaran.