லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் 6 வேட்பாளர்களை சமாஜ்வாடி அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் காலியாக உள்ள 10 எம்எல்ஏ தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதுவரை இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், அரியானா, காஷ்மீர் மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 10 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சமாஜ்வாடி கட்சி நேற்று அறிவித்தது. மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி, காங்கிரஸ் இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன. ஆனால் அரியானா சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடிக்கு எந்த தொகுதியையும் காங்கிரஸ் தராத நிலையில், தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளே சமாஜ்வாடி வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், 10 தொகுதியில் 5 இடங்களை தர காங்கிரஸ் கேட்டிருந்தது. அக்கட்சி கேட்டிருந்த மஜ்வான் (மிர்சாபூர்), கைர் (அலிகர்), மீராபூர் (முசாபர்நகர்) ஆகிய தொகுதிகளுக்கு சமாஜ்வாடி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இது குறித்து சமாஜ்வாடி செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரசுடனான தொகுதிப் பங்கீடு குறித்து கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முடிவு செய்வார்’’ என்றார். அரியானா மாநில தேர்தல் முடிவின் விளைவுதான் காங்கிரஸ் கேட்ட இடங்களில் சமாஜ்வாடி தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளதாக பாஜ செய்தித் தொடர்பாளர் திரிபாதி கிண்டலடித்துள்ளார்.
The post உபி இடைத்தேர்தல் 6 தொகுதிக்கு சமாஜ்வாடி வேட்பாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.