மதுரை: மதுரையை சேர்ந்த எலெக்ட்ரீஷியன், சாக்பீஸ் எழுத்துக்களை அழிக்கும் டஸ்டர், குப்பையை தானாக விரைந்து அள்ளும் முறம் ஆகியவற்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார். மதுரை பீபீ.குளத்தை சேர்ந்தவர் அப்துல் ரஜாக் (54). எலெக்ட்ரீஷியன். தற்போது தனியார் பள்ளியில் பகுதி நேர பயிற்சி ஆசிரியர். இவர் சோறும், குழம்பும் சமைக்கும் ஒரே குக்கரை கண்டறிந்ததற்கு தேசிய விருது பெற்றுள்ளார். இதுவரை ரயில் தண்டவாள விரிசல் கண்டறிவது, இருதலை மின்விசிறி, ராணுவத்தினர் அணிய வசதியாக பனி கோட், பார்வையற்றோருக்கான அட்ஜஸ்டபிள் டாய்லட் உள்ளிட்ட 55 கண்டுபிடிப்புகளை கண்டறிந்துள்ளார். அப்துல் ரஜாக் தற்போது, போர்டு அழிக்கும் டஸ்டர், குப்பையை தானாக அள்ளும் முறம் ஆகியவற்றை கண்டறிந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கல்வி நிலையங்களில் சுண்ணாம்பு சாக்பீசில் போர்டில் எழுதுகிறோம். அதனை தற்போது பயன்பாட்டில் உள்ள டஸ்டரால் அழித்தால் தூசு வெளியில்தான் விழுந்து பறக்கிறது. இது கண், சுவாச பாதிப்புகளுடன், அலர்ஜி பாதிப்புகளை தருகிறது. ஆசிரியர் மட்டுமின்றி மாணவர்களும் இந்த தூசியால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் நான் கண்டறிந்துள்ள டஸ்டரில் தூசுகள் அதற்குள்ளேயே விழுந்து விடும். ஒரு காலி வாட்டர் பாட்டில், ஒன்றரை அடி ஒரு பிவிசி பைப், அதில் ஸ்பாஞ்ச் சுற்றியுள்ளேன்.
அழிக்கும்போது வெளியேறும் தூசு காலி பாட்டிலுக்குள் விழுந்து விடும். வெளியில் சென்று தட்டி சுத்தப்படுத்திக் கொள்ளலாம். ஸ்பாஞ்சை மூன்று இடங்களில் டேக் வைத்து கட்டி இருப்பதால் பள்ளம் கிடைத்து தூசுகளை பள்ளத்தின் வழியாக பாட்டில் உள்வாங்கிக் கொள்ளும். வெறும் பத்து ரூபாய்க்குள் செய்து விடலாம். இதுதவிர, குப்பையை தானாக அள்ளும் முறம் செய்துள்ளேன். ஏற்கனவே உள்ள முறத்தில் குப்பை அள்ள துடைப்பம் வேண்டும். குனிந்து அள்ளவும் சிரமம். ஆனால் இந்த முறத்தை குப்பை பகுதியில் வைத்து நடந்தபடி உருட்டித் தள்ளினால் போதும். முறத்தின் வாய்ப்புறத்தில் பாட்டில் கழுவும் பிரஷ் இணைத்துள்ளேன்.
சுத்துவதற்கு இருபுறமும் பேரிங் இணைத்து, வெளிப்புறம் ரவுண்ட் வீல் மாட்டியுள்ளேன். ஒரு இஞ்ச் பைப் கைப்பிடியுடன் இணைத்துள்ளதால் குனியாமல் உருட்டிச் சென்றாலே வீல் சுற்றி, பிரஷ் சுற்றி குப்பை முறத்திற்குள் வந்து விடும். வீல் சுற்றும்போதுதான் பிரஷ் சுற்றும். மேனுவலாகவே இயக்கலாம். பேட்டரி உள்ளிட்ட எந்த செலவும் இல்லை. எளிய மக்களுக்கான கண்டுபிடிப்பாக இது இருக்கும். வெறும் 150 ரூபாய் செலவில் இதனை தயாரித்திருக்கிறேன். இந்த இரு கண்டுபிடிப்புகளின் மாதிரி வடிவத்தை, பெரியளவில் செய்து பயன்பாட்டிற்கு வழங்க இருக்கிறேன். குறிப்பாக மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பை அள்ளும் முறத்தை வழங்கி, அவர்கள் சிரமமின்றி குப்பைகளை அள்ள உதவுவேன்’’ என தெரிவித்தார்.
The post கண்டுபிடிப்புகளில் அசத்தும் மதுரை எலெக்ட்ரீஷியன்; இந்த டஸ்டரில் போர்டு அழித்தால் தூசி பறக்காது… அலர்ஜியும் வராது: குப்பைகளை குனியாமல் அள்ள புதிய முறம் ரெடி appeared first on Dinakaran.