×

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு ₹4.20 கோடியில் நலத்திட்ட உதவி

*அரசு முதன்மை செயலாளர், மாவட்ட ஆட்சியர் வழங்கினர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் 80 பேருக்கு வீடு கட்டுவதற்கு ஆணையும், 33 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 36 பேருக்கு ரூ.9,56,140 மதிப்பீட்டில் வீட்டு மனைப்பட்டா மற்றும் சாதி சான்றிதழ்கள், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஜன்மன் திட்டத்தின் கீழ் 80 பழங்குடியின மக்களுக்கு ரூ.4.07 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார்.

போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலரான சுன்சோங்கம் ஜடக் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினர் மக்களுக்கான அடிப்படை தேவைகள் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் தொடர்ந்து செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் தற்போது ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஜன்மன் திட்டம் 2024-2025ன் கீழ் தலா ரூ.5.09 லட்சத்தில் வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் 6 பழங்குடியினர் மக்களுக்கு ரூ.30.55 லட்சம் மதிப்பீட்டிலும், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் 14 பழங்குடியினர் மக்களுக்கு ரூ.71.29 மதிப்பீட்டிலும், முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 17 பழங்குடியினர் மக்களுக்கு ரூ.86.57 மதிப்பீட்டிலும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 பழங்குடியினர் மக்களுக்கு ரூ.1.85 கோடி மதிப்பீட்டிலும், காணை ஊராட்சி ஒன்றியத்தில் 3 பழங்குடியினர் மக்களுக்கு ரூ.15.27 லட்சம் மதிப்பீட்டிலும், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 பழங்குடியினர் மக்களுக்கு ரூ.10.85 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 80 பழங்குடியினர் மக்களுக்கு ரூ.4.07 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவு ஆணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திண்டிவனம் தாலுகாவை சேர்ந்த 19 பேருக்கும், விழுப்புரம் தாலுகாவை சேர்ந்த 14 பேருக்கும் என மொத்தம் 33 பழங்குடியினர் மக்களுக்கு ரூ.9,56,140 மதிப்பீட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கான ஆணை வழங்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

எனவே வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவு ஆணை பெற்ற பழங்குடியினர் மக்கள் அனைவரும் தங்களுடைய வீடு கட்டும் பணியை விரைந்து மேற்கொண்டு முடித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எஸ்பி தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்ஷூ, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புகார் தெரிவித்தால் நடவடிக்கை-எஸ்.பி.

எஸ்.பி. தீபக் சிவாச் கூறுகையில், காவல்துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உங்களுக்கு இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியரும் இதுகுறித்து தெரிவித்துள்ளார். எனவே தங்களுக்கு ஏதேனும் பிரச்னை, இடையூறுகள் இருந்தால் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சாதிய பாகுபாடின்றி ஊராட்சி நிர்வாகம்-ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் பழனி தலைமையில் நடந்தது. தொடர்ந்து அவர் கூறுகையில், பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதிய பாகுபாடுகள் இதுவரை ஏற்பட்டதில்லை. அப்படியிருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம். உங்களை செயல்படவிடாமல் தடுப்பது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தெரிவிக்கலாம். இதுவரை நமது மாவட்டத்தில் அப்படியொரு புகார்கள் வந்ததில்லை.

உங்களின் தேவைகள், ஊராட்சிகளின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தெரிவிக்கலாம் என்று கூறினார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தவும், வீட்டு மனை பட்டா வழங்கிடவும் வேண்டும். சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து வழங்க வேண்டும். மற்றபடி சாதிய ரீதியான பிரச்னைகள் இருந்ததில்லை. வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென கேட்டுக்கொண்டனர். இதற்கு பதலளித்த ஆட்சியர் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளின் தலைவர்கள் தெரிவித்த சாலை, சாதிச்சான்றிதழ் குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

The post விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு ₹4.20 கோடியில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Tags : Villupuram district ,Government ,Principal Secretary ,Villupuram ,Villupuram District Collectorate… ,
× RELATED கூலி ஆட்கள் கிடைக்காமல் அவதி...