×

கூலி ஆட்கள் கிடைக்காமல் அவதி வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு

*விவசாயிகள் வேதனை

மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை ஏற்பட்டு மழை நீரானது அனைத்து நீர் நிலைகளிலும் நிரம்பி விவசாய நிலங்களில் பாய்ந்ததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது விவசாயிகளால் பயிரிடப்பட்ட சம்பா சாகுபடி அறுவடைக்கு 10 நாட்களே இருந்த நிலையில் மழை நீரானது விவசாய நிலங்களுக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால் அறுவடைக்கு காத்திருந்த நெல் கதிர்கள் நீரில் சாய்ந்ததால் விவசாயிகள் செய்வதறியாமல் தவித்தனர்.

தற்போது விவசாய நிலங்களில் இருந்த மழைநீர் வடிய தொடங்கிய நிலையில் நீரில் மடிந்துபோன நெல் கதிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகள் நெல் கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் நெல் அறுவடை இயந்திரம் மூலம் ஏக்கருக்கு ரூ.3000 முதல் 5 ஆயிரம் வரை செலவு செய்து அறுவடை செய்யும் நிலையில் சேற்றில் நெல் அறுவடை இயந்திரம் இறங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைகளால் வேலையாட்களை கொண்டு மட்டுமே நெல்மணிகளை அறுவடை செய்ய வேண்டிய சூழல் உள்ளதால் ஆள் பற்றாகுறையால் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.

கூலி ஆள் ஒரு நபருக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கேட்பதால் அதை கொடுக்க விவசாயிகள் முன் வந்தாலும் விவசாய அறுவடைப் பணி தெரிந்த கூலி ஆட்கள் போதிய அளவு இல்லாததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

தற்போது நீரில் மூழ்கியுள்ள நெல்கதிரை முழுமையாக அறுவடை செய்ய முடியாத சூழல் இருந்தாலும் கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோல் தேவைப்படுவதால் நீரில் மூழ்கியுள்ள நெற்கதிர்களை விவசாயிகள் கடும் மனவேதனையோடு அறுவடை செய்து வருகின்றனர்.

மழை வெள்ள நிவாரண நிதி அரசு கொடுத்திருந்தாலும் இவ்வருடம் விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த விளைச்சல் மழைநீரில் வீணாகிப்போனது விவசாயத்தை நம்பியிருந்தவர்களின் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

The post கூலி ஆட்கள் கிடைக்காமல் அவதி வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Melmalayanur ,Villupuram district ,Senchi ,Benjal ,Dinakaran ,
× RELATED தவறி விழுந்து உயிரிழந்த பெயின்டர்...