×

சாலையில் நடந்து சென்றவர் மீது ஸ்கூட்டர் மோதல் கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம்

அந்தியூர் : அந்தியூர் அருகே நடந்து சென்றவர் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் ரோட்டில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே ஸ்கூட்டரில் தர்மபுரி மாவட்டம் என். புதூர், நாற்றம்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (34), அவரது மனைவி ராஜேஸ்வரியுடன் (26) ஸ்கூட்டரில் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் கூலி வேலை செய்வதற்காக நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டு இருந்தார்.

அந்தியூர் தீயணைப்பு நிலையம் அருகே செல்லும்போது திடீரென சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி லைன்மேடு பகுதியை சேர்ந்த அந்தியூரில் ஓட்டலில் வேலை செய்யும் தொழிலாளி காளியப்பன் (60) என்பவர் சாலையை கடந்தார். அப்போது ஸ்கூட்டர் அவர் மீது மோதியதில் நிலை தடுமாறிய கணவன், மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் மூவருக்கும் பலத்த அடிபட்டது.

இந்நிலையில் தலையில் அடிபட்டு கிடந்த நடந்து வந்த காளியப்பனுக்கு அவ்வழியாக சென்று கொண்டிருந்த அந்தியூர் தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து நடத்துனர் சௌந்தரராஜன், முதலுதவி சிகிச்சை அளித்து அவரின் உயிரை காப்பாற்ற உதவியுள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கணவன், மனைவி மற்றும் காளியப்பன் ஆகிய 3 பேரும் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையில் நடந்து சென்றவர் மீது ஸ்கூட்டர் மோதல் கணவன்-மனைவி உள்பட 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Antyur ,Tasmak ,Attani, Erode district ,
× RELATED டாஸ்மாக் கடைகளில் பில் நடைமுறைக்கு...