சிவகங்கை: திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட இறப்பு துரதிர்ஷ்டவசமானது. நெரிசலில் சிக்கி இந்த இறப்புகள் ஏற்படவில்லை. உடல்நலக்குறைவு, அதிகப்படியான வெப்பத்தால் ஏற்பட்ட மயக்கம் உள்ளிட்டவற்றால் இறப்பு ஏற்பட்டுள்ளது. விமானப்படையின் சாகசம் பாராட்டுக்குரியது. நான் எப்போதும் கருத்துக்கணிப்புகளை ஏற்றுக்கொள்வதில்லை. அரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என கட்சிரீதியான மற்றும் அரசியல் விமர்சகர்கள் வழி தகவல் வந்துள்ளது.
காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை பெற்று தர வேண்டும் என்பதே முதல் இலக்கு. இஸ்ரேல், ஈரான் போர் குறித்து பிரதமரின் கருத்தை கட்சி வேறுபாடின்றி காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும். போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஈரானில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கவில்லை. தற்போது அமெரிக்காவும் எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இதனால் இந்தியாவில் எண்ணெய் விலையேற்றம் இருக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
The post திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.